தும்கூரில் பிரமாண்ட தொழில்நகரம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பின் 102-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பிரமாண்ட தொழில்நகரத்தை தும்கூரில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக 18 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம். இங்கு தொழில் தொடங்க 105-க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
இதற்கு தேவையான அடிப்படை கட்டுமான வசதிகளை செய்துதர அரசு தயாராக உள்ளது.
தொழில் நகரத்தால் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாகும். மாநில அரசு தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் தொழில் கொள்கையை உருவாக்கியுள்ளது.
முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தேசிய அளவில் பொருளாதாரத்தில் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று நிதி ஆணைத்தின் தலைவர் என்.கே.சிங் பாராட்டியுள்ளார்.
கல்வி, தொழில், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளில் கர்நாடக முன்னணியில் உள்ளது. அதே போல தேசிய அளவில் கல்வி, தொழில், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகளில் மாநிலத்துக்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளன. கர்நாடக தொழில் வர்த்தகசபை கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநில அரசு உறுதுணையாக இருக்கும்.
அரசியலில் கருத்து வேற்றுமை இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தில் மற்ற நகரங்களிலும் தொழில்பேட்டைகளை உருவாக்கி, வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பின் தலைவர் சுதாகர் ஷெட்டி, புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஜனார்தன், துணைத் தலைவர் பெரிகல் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.