பெங்களூரு

கிருஷ்ணராஜ சாகர் அணை நீரை கால்வாய்களுக்கு திறந்துவிடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

29th Jun 2019 10:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்று நீரை விவசாயம் செய்துவரும் மண்டியா மாவட்ட விவசாயிகள், நிலுவைப் பயிர்களை காப்பாற்றுவதற்காக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி கடந்த சில நாள்களாக கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் மண்டியாவில் உள்ள நீர்ப்பாசனத் துறை அலுவலகம் முன் தர்னாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு செவிசாய்க்காத மாநில அரசை கண்டித்து வெள்ளிக்கிழமை கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நீர்ப்பாசன அலுவலகம் மற்றும் மத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் இதேகோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்த தர்ஷன் புட்டனையா பேசியது: நிலுவைப்பயிர்கள் அழியும் நிலையில் உள்ளன. இதைத் தவிர்ப்பதற்காக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் விடுத்தக் கோரிக்கையை மாநில அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். 
அடுத்தக்கட்டமாக கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். கால்வாய்களுக்கு நீர் திறந்துவிடாவிட்டால், போராட்டத்தை தீவிரமாக்குவோம் என்றார். இதைத் தொடர்ந்து, கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிட விவசாயிகள் முற்பட்டனர். இதன்காரணமாக, கிருஷ்ணராஜ சாகர் அணையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT