பெங்களூரு

கர்நாடக மஜத, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம்: பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவு

29th Jul 2019 08:22 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் மஜத,  காங்கிரஸைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதிநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ததால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில்,  கர்நாடக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் போதுமான எண்ணிக்கை பலம் இல்லாததால், ஜூலை 23-ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு வீழ்ந்தது.  இதனிடையே, கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையா அளித்த புகாரின்பேரில்,  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி,  எம்எல்ஏ ஆர்.சங்கர் ஆகிய 3 பேரையும் ஜூலை 25-ஆம் தேதி தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 
முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால்,  பேரவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு ரமேஷ்குமாருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருகிறது.  நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்காக ஜூலை 29-ஆம் தேதி(திங்கள்கிழமை) சட்டப்பேரவை கூடவிருக்கும் நிலையில்,   காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து,  பெங்களூரு, சட்டப்பேரவை உறுப்பினர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்,செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி மற்றும்  ஆர்.சங்கர் ஆகிய 3 பேரின் எம்எல்ஏ பதவிகளை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தேன்.  இதன் தொடர்ச்சியாக, கட்சி விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டது, கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதது உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் சித்தராமையா, மஜத சட்டப்பேரவைக் குழு தலைவர் குமாரசாமி ஆகியோர் அளித்த புகார் மனுக்களை விசாரித்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள், மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களின் பதவியை தகுதி நீக்கம் செய்து
உத்தரவிடுகிறேன். 
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரதாப் கெளடா பாட்டீல், பி.சி.பாட்டீல், சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், ஆனந்த் சிங், ரோஷன் பெய்க், முனிரத்னா, கே.சுதாகர்,  எம்.டி.பி.நாகராஜ், ஸ்ரீமந்த் பாட்டீல்,  மஜதவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எச்.விஸ்வநாத்,  கோபாலையா,  நாராயண கெளடா ஆகிய 14 பேரையும் தகுதி நீக்கம்செய்கிறேன்.  எனது நீதியியல் மனசாட்சியைப் பயன்படுத்தி இம் முடிவுக்கு வந்திருக்கிறேன்.  இந்த விவகாரத்தில் தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களின் செயல்பாடு என்னை 100 சதம் காயப்படுத்தியுள்ளது.  இந்த 14 பேரின் ராஜிநாமா கடிதங்களையும் நிராகரித்த பிறகு தான், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தகுதிநீக்கம் செய்திருக்கிறேன். ராஜிநாமா கடிதங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு நேரில் வருமாறு விடுத்த நோட்டீசை இவர்கள் மதிக்கவில்லை.  மேலும், ஆஜராவதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டிருந்தனர்.  தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 எம்எல்ஏக்களும் 15-ஆவது சட்டப்பேரவையின் பதவிக் காலம் நிறைவடையும் வரை இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அவைக்கு வரமுடியாது. 
எனது முடிவை கடமையுணர்வோடும்,  அச்ச உணர்வோடும் எடுத்திருக்கிறேன்.  சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கவிருப்பதாலும்,  அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதாலும்,  புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க நேர்ந்தது.  தகுதி நீக்கம் செய்திருப்பதை நாடகம் என்றும்,  ஏற்கெனவே திட்டமிட்டது என்றும் கூற முடியாது.  இந்த விவகாரத்தை நான் நன்முறையில் கையாண்டிருக்கிறேன்.   நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால்,  பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட என்.மகேஷை தகுதிநீக்கம் செய்யக் கோரி மனு
அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளின்போது பேரவைத் தலைவராக எனக்கு பெரும் நெருக்கடி அளிக்கப்பட்டது.  என்னை மன உளைச்சலின் விளிம்புக்குத் தள்ளிவிட்டனர். 
பேரவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.  பாஜகவினர் எ மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால்,  அதை எப்படி அணுகுகிறேன் என்பதைப் பாருங்கள்.  நான் பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருப்பேன்.   அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால்,  எனது கடமையை ஆற்றுவேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம் என்றார் அவர்.
வாக்கெடுப்பில் வெற்றி
கர்நாடக சட்டப்பேரவையில் அங்கம் வகித்த 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மஜத எம்எல்ஏக்கள் ஆக மொத்தம் 17 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.   இதனால், ஒரு நியமன உறுப்பினர் உள்ளிட்ட 225 பேர் கொண்ட சட்டப்பேரவையின் பலம் 208 ஆகக் குறைந்துள்ளது.  பேரவைத்தலைவர் நீங்கலாக பேரவையின் பலம் 207 ஆகும்.  அப்படியானால், சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 104 உறுப்பினர்களின் ஆதரவு
தேவைப்படுகிறது.   
பாஜகவுக்கு 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  அதனால் சட்டப்பேரவையில் திங்கள்கிழமை முதல்வர் எடியூரப்பா கொண்டுவரவிருக்கும் தனது பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதில் எந்த தொந்தரவும் இருக்காது.  மேலும்,  சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.  17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்குப் பிறகு பேரவையில் காங்கிரஸின் பலம் நியமன உறுப்பினர் உள்பட 66,  மஜதவின் பலம் 34 ஆகவும் உள்ளது.

விதான செளதாவைச் சுற்றி 144 தடை உத்தரவு
பெங்களூரு, ஜூலை 28:  கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில்,  ஜூலை 29,30 தேதிகளில் விதான செளதாவைச் சுற்றி  144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்
பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் ஆலோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:  பெங்களூரு விதான செளதாவில் உள்ள சட்டப்பேரவையில் திங்கள்கிழமை முதல்வர் எடியூரப்பா அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில்,  ஜூலை 29-ஆம் தேதி காலை 6 மணி முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணிவரை விதான செளதாவைச் சுற்றியுள்ள 2 கி.மீ. பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   தடை உத்தரவின் போது அப் பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ,  பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம்,  தர்னா நடத்துவதோ கூடாது.  மேலும்,  ஆயுதங்கள்,  வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT