இறைச்சி விற்பனையாளர்கள் கடையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்காவிடில் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டும் என மேயர் கங்காம்பிகே தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குப்பை அகற்றுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: பெங்களூரில் கடந்த 3 நாள்களாக குப்பையை அள்ளுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. குப்பைகளை அள்ளுவதில் ஒப்பந்ததாரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாநகரில் அதிக அளவில் கட்டட கழிவுகள் வருகின்றன. இதனை கொண்டு சாலைகளில் உள்ள குழிகளை நிரப்ப வேண்டும். இதேபோல பெங்களூரில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான இறைச்சிக் கடைகள் உள்ளன. இந்த கடைகளிலிருந்து வெளியே வரும் கழிவுகள் நாள் ஒன்றுக்கு 40 டன்னாக உள்ளது. ஒரு சில பண்டிகை நாள்களில் இது 80 முதல் 90 டன்னாக உயருகிறது. இறைச்சிக் கழிவுக்கென்றே தனியான ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளிக்கு பிறகு இறைச்சிக் கழிவுகளை ஒப்பந்ததாரிடம் ஒப்படைக்காத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாநகரட்சி ஆணையர் மஞ்சுநாத்பிரசாத், துணை மேயர் பத்ரே கெளடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.