பெங்களூரு

திருவள்ளுவர் சிலை திறப்பின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழா: ஆகஸ்ட் 11-இல் நடக்கிறது

22nd Jul 2019 10:24 AM

ADVERTISEMENT

பெங்களூருவில் ஆக.11-ஆம் தேதி திருவள்ளுவர் சிலை திறப்பு 10-ஆம் ஆண்டு நிறைவுவிழா நடத்தப்படுகிறது.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் அல்சூர் ஏரி எதிரே நிறுவப்பட்டு 18-ஆண்டுகளாக மூடிய நிலையில் இருந்த திருவள்ளுவர் சிலையை, 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-இல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி,  அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் திறந்துவைத்தனர். இதன் 10-ஆவது ஆண்டுவிழாவை கொண்டாட தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. இந்த விழாவை நடத்துவது தொடர்பாக தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெங்களூரு யாதவர் சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் கர்நாடக மாநில அதிமுக இணைச் செயலர் எஸ்.டி.குமார்,  பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் செயலர் வா.ஸ்ரீதரன், புலவர் மணிவண்ணன், கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், தமிழடியான், கோபிநாத், செந்தில் குமார், தேனீரா உதயகுமார், சாந்தகுமார், தொழிலதிபர் பக்தவத்சலம், ஜெயகிருட்டிணன் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.
விழாவை ஆக.11-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடத்துவது என்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பூங்காவை அலங்கரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிறைவுவிழாவின் அங்கமாக நலத்திட்ட உதவிகள், திருக்குறள் புத்தகங்கள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் போன்ற சிறப்புநிகழ்வுகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
விழாவை நடத்த எஸ்.டி.குமாரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, தி.கோ.தாமோதரன், புலவர் மணிவண்ணன், ராமச்சந்திரன், தேனீரா உதயகுமார், செந்தில்குமார், கோபிநாத், கோபாலகிருஷ்ணன், சாந்தகுமார், புலவர் கார்த்தியாயினி, புண்ணியமூர்த்தி, மேக்லின் பிரெசில்லா ஜெர்ரி, ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய விழாக் குழு அமைக்கப்பட்டது. 
விழாவில் பங்காற்ற விரும்புவோர் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமாரை 9343765448 என்ற செல்லிடப்பேசியில் அணுகலாம் என்று விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT