மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது என்று பாஜகவைச் சேர்ந்த சீனிவாஸ் பிரசாத் எம்.பி தெரிவித்தார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாநிலத்தில் காங்கிரஸ்,-மஜத கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சிகளில் உள்கட்சி குழப்பம் உள்ளது. இதனால் வேதனையடைந்த அக் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். பெரும்பான்மை இழந்துள்ள நிலையில், மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால், இடைக்காலத் தேர்தலைச் சந்திக்க முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். இடைக்காலத் தேர்தல் நடைபெறுவது ஒருபோதும் சாத்தியமில்லை.
கூட்டணி அரசு கவிழ்ந்தால், பாஜக ஆட்சி அமைக்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு கூட்டணி அரசு கவிழும் என்பதில் சந்தேகமில்லை. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முதல்வர் குமாரசாமி, பேரவைத் தலைவரிடம் கால அவகாசம் கோரியுள்ளார். அது தொடர்பாக பேரவைத் தலைவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் என்றார் அவர்.