பெங்களூரு

கர்நாடகத்தில் மீண்டும் பாஜக-மஜத கூட்டணி மலருமா?

15th Jul 2019 10:10 AM

ADVERTISEMENT

மஜத-காங்கிரஸ் கூட்டணி தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள இயலாதபட்சத்தில், கர்நாடகத்தில் மீண்டும் பாஜக-மஜத கூட்டணி மலரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
2004-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி தரம்சிங் தலைமையில் அமைக்கப்பட்டது.  2006-இல் காங்கிரஸ் மீது அதிருப்திகொண்ட எச்.டி.குமாரசாமி, மஜத எம்எல்ஏக்களை பிளவுபடுத்தி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தலா 20 மாதங்கள் ஆட்சி அமைக்க ஒப்பந்தம் செய்துகொண்டு, மஜத-பாஜக கூட்டணியை அமைத்தார்.  குமாரசாமி தலைமையில் அமைந்த கூட்டணி 20 மாதங்களுக்கு பிறகு தொடரமுடியாததால் கலைக்கப்பட்டது.  ஒப்பந்தத்தின்படி 20 மாதங்களுக்கு பாஜகவிடம் அதிகாரத்தை ஒப்படைக்கமஜத தவறியதால், கூட்டணி முடிவுக்கு வந்திருந்தது.
அந்த கசப்பான அனுபவத்தின்காரணமாக தான், 2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காதநிலையில்,  104 இடங்களில் வென்றிருந்தபோது மஜதவுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவில்லை.  பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக்கிவைக்க மஜதவுக்கு தாமாக முன்வந்து காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் தான் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது.  ஆனால், இக் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளதால்,  அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசு ஆட்சியில் நீடிக்கும் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சட்டப்பேரவை கலைக்கப்படுவதை காங்கிரஸ்,பாஜக, மஜத எம்எல்ஏக்கள் யாரும் விரும்பவில்லை.  காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் பாஜகவின் திட்டத்திற்குபொதுமக்களிடையே கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது.  இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதும் பாஜக தலைவர்கள்,  2006-ஆம் ஆண்டைப் போல, மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்த முற்பட்டுள்ளது. 
சில நாட்களுக்கு முன்பு மஜத தலைவர்களுடன் தொலைபேசி வழியே ஆட்சிப் பகிர்வு குறித்து பாஜக தலைவர்கள் முரளிதர் ராவ், கே.எஸ்.ஈஸ்வரப்பா ஆகியோர் விரிவாக பேசியிருக்கிறார்கள்.  பாஜக, மஜத மேல்மட்டத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளநிலையில், நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டனர்.  பெங்களூரில் உள்ள குமாரகுருபா இல்லத்தில் சில நாட்களுக்கு முன்பு மஜத அமைச்சர் சா.ரா.மகேஷை பாஜக தலைவர்கள் முரளிதர்ராவ், கே.எஸ்.ஈஸ்வரப்பா ஆகியோர் சந்தித்து 30 நிமிடங்களுக்கும் அதிகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.  இது எதேச்சையான சந்திப்பு என்று இருதரப்பினரும் விளக்கம் அளித்திருந்தாலும்,  இது திட்டமிட்ட பேச்சுவார்த்தை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, எஞ்சியுள்ள 4 ஆண்டுகால பதவியை தலா 2 ஆண்டுகள் ஆட்சி செய்வது என்றும், முதல் 2 ஆண்டுகளை பாஜகவும், கடைசி 2 ஆண்டுகளை மஜதவும் ஆட்சி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்ததும், மஜத ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டு, அதற்கேற்றப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
பாஜக-மஜத கூட்டணி அமைந்தால்,  எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மும்பையில் தஞ்சம் அடைந்திருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கதி என்ன என்று விவாதிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சீடர்கள் என்று கூறப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா, பைரதிபசவராஜ் உள்ளிட்டோர் நம்பகத்தன்மை உள்ளவர்கள் அல்ல என்பதால்,  அவர்களை கை கழுவவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பாஜக-மஜத கூட்டணி திட்டத்திற்கு தடைக்கல்லாக இருப்பவர் மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகெளடா மட்டும்தான்.  மஜத-காங்கிரஸ் கூட்டணி நெருக்கடியில் சிக்கியிருப்பதற்கு மூலக்காரணமாக கருதப்படும் சித்தராமையாவை ஒழித்துக்கட்டுவதற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தவிர்க்கமுடியாதது என்றுமுதல்வர் எச்.டி.குமாரசாமி உள்ளிட்ட மஜத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  எச்.டி.தேவெ கெளடாவைச் சமாதானப்படுத்தி, பாஜக-மஜத கூட்டணிக்கு ஒப்புதல் பெற மஜத தலைவர்கள் தீவிரமுயற்சியை எடுத்துவருகிறார்கள்.  மஜதவைக் காப்பாற்றுவதற்கு பாஜகவுடன் கூட்டணி அமைக்க தனது முதல்வர் பதவியை தியாகம் செய்யவும் எச்.டி.குமாரசாமி தயாராகிவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து விலக்கிவைக்க மஜதவுடன்கூட்டணி சேருவதுதான் சிறந்த திட்டம் என்று பாஜகவும் கருதுகிறது.  இந்த திட்டம் சாத்தியமானால், அடுத்த  20 ஆண்டுகளுக்கு காங்கிரசை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT