பெங்களூரு

அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.டி.பி.நாகராஜு உடனான சமரச முயற்சி தோல்வி

15th Jul 2019 10:12 AM

ADVERTISEMENT

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ எம்.டி.பி.நாகராஜு உடனான சமரச முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13,  மஜதவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.  இதனால் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  கூட்டணி அரசைக் காப்பாற்றுவதற்காக மஜத, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான ஹொசகோட்டே தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எம்.டி.பி.நாகராஜை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஜி.பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.  முடிவில் எம்.டி.பி.நாகராஜ், முன்னாள் முதல்வர் சித்தராமையாவிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.  சித்தராமையாவுடன் நடந்த 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, தனது ராஜிநாமா கடிதத்தைத் திரும்பப் பெற எம்.டி.பி.நாகராஜ் முடிவுசெய்து, அதை பகிரங்கமாக அறிவித்தார்.  இதனால் மகிழ்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள், அவர் மூலமாக மும்பையில் உள்ள அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.  தில்லி சென்றுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ கே.சுதாகரையும் சமரசப்படுத்தி, ராஜிநாமா கடிதங்களை திரும்பப்பெற முயற்சி மேற்கொண்டனர்.
     இதைத் தொடர்ந்து, பெங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மும்பைக்குப் பயணமான எம்.டி.பி.நாகராஜ்,  அங்கு ரேனைசன்ஸ் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் அதிருப்தி காங்கிரஸ்,  மஜத எம்எல்ஏக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.டி.பி.நாகராஜ்,  தனது ராஜிநாமா கடிதத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.  இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.  இதன் மூலம் எம்.பி.டி.நாகராஜை சமாதானப்படுத்த காங்கிரசார் மேற்கொண்டிருந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் எம்.டி.பி.நாகராஜ் கூறியது:  எனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை பேரவைத் தலைவரிடம் அளித்துவிட்டேன். இந்நிலையில், ராஜிநாமா கடிதத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை.  எனது முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்.  தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ள அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒத்தக் கருத்துடன் இருக்கிறோம். ஆனால், கே.சுதாகர் ஒப்புக்கொண்டால்,  எனது ராஜிநாமா கடிதத்தைத் திரும்பப் பெறுவேன்.  காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, முதல்வர் குமாரசாமி,  அமைச்சர் டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டதால் ராஜிநாமாவை திரும்பப் பெறுவதாகக் கூறியிருந்தேன் என்றார் அவர்.
அதிருப்தி எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகர் கூறுகையில்," எங்களை சமாதானப்படுத்துவதற்காக எம்.பி.டி.நாகராஜ் மும்பை வந்துள்ளதாக கூறுவதில் உண்மையில்லை.  எங்களது முடிவில் உறுதியாக இருக்கிறோம்.  மும்பையில் தற்போது 12 எம்எல்ஏக்கள் தங்கியிருக்கிறோம்.  நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.  தில்லியில் உள்ள சுதாகர், வெகுவிரைவில் மும்பைக்கு வந்து எங்களோடு இணைந்திருப்பார்" என்றார் அவர்.
தங்களது ராஜிநாமா கடிதங்களை உடனடியாக ஏற்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக்கோரி ஏற்கெனவே 10 எம்எல்ஏக்கள் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், கூடுதலாக எம்.டி.பி.நாகராஜ்,  கே.சுதாகர், ஆனந்த் சிங், முனிரத்னா, ரோஷன் பெய்க் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT