பெங்களூரு

ஆளுநரிடம் ராஜிநாமா கடிதம் அளிப்பு: ஆனந்த்சிங்கிற்கு விவரம் தெரியவில்லை: பேரவைத் தலைவர்

4th Jul 2019 10:03 AM

ADVERTISEMENT

ஆனந்த்சிங்கிற்கு ராஜிநாமா கடிதத்தை யாரிடம் கொடுப்பது என்ற விவரம் தெரியாதது ஆச்சரியம் அளிக்கிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், விஜயநகரா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர் ஆனந்த்சிங். இவர் திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்த கடிதத்தை, பெங்களூரு தொம்மலூரில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் ராமேஷ்குமாரின் இல்லத்திற்கு சென்று அளித்தார். 
அப்போது, ரமேஷ்குமார் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்ததால், ராஜிநாமா கடிதத்தை பிறகு பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். 
இந்த நிலையில், ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்த ஆனந்த்சிங், ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்தார்.
இதுகுறித்து புதன்கிழமை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: 
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங், தனது ராஜிநாமா கடிதத்தை, ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கொடுத்துள்ளார். எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்பவர்கள், ராஜிநாமா கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச விவரத்தை அறிந்திருக்க வேண்டும். 
ஆனந்த்சிங், தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் கொடுத்துள்ளார். அவருக்கு தேவைப்பட்டால், குடியரசுத் தலைவரையும் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை கொடுக்கட்டும். எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையுள்ள குறைந்தபட்ச சட்ட அறிவைப் பெற்றிருக்க வேண்டும். 
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தால், அதனை ஆட்சேபிக்க அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு மட்டுமின்றி, ஊடகம் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் உரிமை உள்ளது. ஆனந்த்சிங் என்ன காரணத்துக்காக ராஜிநாமா கொடுத்துள்ளார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. 
மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோளி கொடுத்துள்ளதாகக் கூறப்படும் ராஜிநாமா கடிதம் என்னிடம் வரவில்லை. எனவே, அதுகுறித்து எந்த கருத்தும் கூறமுடியாது என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT