மஜத மாநிலத் தலைவர் பதவியை ஏற்க தயாராக இருக்கிறேன் என்று எம்எல்ஏ எச்.கே.குமாரசாமி தெரிவித்தார்.
ஹாசனில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
மூத்தத் தலைவர்கள் விரும்பினால், மஜத மாநிலத் தலைவராகப் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்.
மாநிலத் தலைவராக, என்னை நியமிக்க கட்சித் தலைவர்கள் விவாதித்துள்ளது குறித்து தெரியாது. கட்சியில் எந்தப் பதவியையும் தேடிச் சென்று பெற்றதில்லை. அதற்கான விருப்பமும் எனக்கு இல்லை.
6 முறை தொடர்ச்சியாக எம்எல்ஏவாகப் பணியாற்றிவருகிறேன். அந்த அனுபவத்தில் எந்தப் பதவியை அளித்தாலும் அதை நிர்வகிக்கத் தயாராக இருக்கிறேன். மஜதவின் உண்மையான தொண்டனாகப் பணியாற்றும் வரும் என்னை பற்றி ஊடகங்களில் தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்கள். மஜதவில் இருந்து எந்த சூழ்நிலையிலும் விலகும் எண்ணமில்லை. கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் கருத்து வேறுபாடும் இல்லை. யானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள மலைநாடுப்பகுதி மக்களுக்கு சிறப்புத் தொகுப்பு நிதியை வழங்க வேண்டும். மனிதன்-விலங்கு மோதலைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.