பெங்களூரு

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க முயற்சிக்கவில்லை: எடியூரப்பா

2nd Jul 2019 08:43 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க முயற்சிக்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடக மாநிலத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளதாக,  ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதில் உண்மையில்லை.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிக்கவில்லை.  கூட்டணியில் 21 எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் கூட்டணி அரசின் ஆயுள் நிர்ணயிக்கப்பட உள்ளது. அவர்கள் எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்தால், பாஜக ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கும். ஆனால், சட்டப் பேரவைக்கு இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 
காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங்,  தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார். அதன் மீது சட்டப்பேரவைத் தலைவர் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார் என்பதைப் பார்ப்போம். அவரைத் தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிநாமா கொடுத்தால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாஜக ஆலோசிக்கும்.
வறட்சியை கவலைப்படாமல் இருப்பதா?  மாநிலத்தில் வறட்சி நிலவி வருவதால்,  மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,   அமெரிக்காவுக்கு முதல்வர் குமாரசாமி உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளார். குடிநீர் பிரச்னை, மழை பொய்த்துள்ள சூழ்நிலையில் முதல்வர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 
மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாகியுள்ளது. மாநில அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி பாக்கியையும், பெங்களூரு மாநகராட்சி ரூ. 13 ஆயிரம் கோடி பாக்கியையும்
வைத்துள்ளது. 
மழை இல்லாததால், 83 வட்டங்களில் பயிரிடுவதற்கான விதைகளை விதைக்கவில்லை.  ஆனால் இதைப் பற்றி கவலைப்படாமல் கர்நாடக அரசு வேடிக்கை பார்க்கிறது என்றார் எடியூரப்பா. 
பேட்டியின் போது பாஜக எம்எல்ஏக்கள் அரவிந்த் லிம்பாவளி, கோவிந்த கார்ஜோள், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT