எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சிப்பது சட்ட விரோதமானது என்று ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கெளடா தெரிவித்தார்.
கோலாரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம்
கூறியது:-
காங்கிரஸைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பணம் கொடுத்து, தங்கள் கட்சிக்கு இழுக்க பாஜக முயற்சிப்பது சட்டவிரோதமானதாகும். இது மட்டுமில்லாமல், மக்களுடைய தீர்ப்புக்கும் எதிரானதாகும்.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது முதல், ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்முயற்சியில் ஈடுபட்டுவந்துள்ளது.
திரைமறைவில் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தாலும், வெளியில் அப்படி எதுவுமில்லை என்பது போல பாஜகவினர் பேசிவருகிறார்கள்.
கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, பாஜக ஆட்சியை அமைக்க அந்தக் கட்சி தீவிரமாக முயற்சிப்பதை 2 மாதங்களாக கூறிவருகிறேன். திரைமறைவில் இருந்துகொண்டு ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. பாஜகவின் முயற்சி பலிக்காது.
பண ஆசையைக் காட்டி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக துடிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். கடந்த ஓராண்டாக பாஜக மேற்கொண்டுவரும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை காங்கிரஸ், மஜத கட்சிகள் முறியடித்துவருகின்றன. அதேபோல, இந்த முறை நடைபெற்றுவரும் ஆட்சிக்கவிழ்ப்புமுயற்சியை முறியடிப்போம் என்றார் அவர்.