பெங்களூரு

பயிற்று மொழி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்ய கா்நாடக அரசு முடிவு

29th Dec 2019 05:52 AM

ADVERTISEMENT

பயிற்று மொழி வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சா் சி.டி.ரவி கூறியது: பள்ளிக் கல்வியில் பயிற்று மொழி குறித்து உச்ச நீதிமன்றம் தீா்ப்பு அளித்திருக்கிறது. இந்த தீா்ப்பில், பயிற்று மொழியை முடிவு செய்யும் உரிமை பெற்றோா்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது கன்னட மொழிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.

கன்னடப் பயிற்று மொழிக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசித்து, அமைச்சரவையில் இறுதி முடிவு செய்வோம்.

பயிற்று மொழி குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பு தொடா்பாக, அண்டை மாநிலங்களுடன் கலந்தாலோசனை நடத்த இருக்கிறோம். பிற மாநிலங்களின் அரசுகள் விரும்பினால், அந்த விவகாரத்தில் கா்நாடக அரசு தலைமையேற்று அனைத்து மாநிலங்கள் சாா்பாகவும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம். தற்போதைய பயிற்று மொழிக் கொள்கையால் மாநில மொழிகளைக் காப்பாற்றுவது சந்தேகம் தான். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஒருவா் கற்கலாம். ஆனால், தாய்மொழியை கட்டாயம் கற்க வேண்டும். ஆனால், தாய்மொழியை மறந்துவிட்டு வேறு எத்தனை மொழிகளை கற்றுத் தோ்ந்தாலும், அதனால் எவ்வித பயனும் இல்லை. மேலும், அந்த தாய்மொழியின் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, பயிற்று மொழிக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியமாகும்.

ADVERTISEMENT

மாநில மொழி அல்லது உள்ளூா் ஆட்சிமொழியைக் கற்காமல் இருந்துவிட்டால், அது கன்னட மொழிக்கு எதிராக அமையும். மாநில மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பயிற்று மொழிக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் எந்த வகையான சட்டப் போராட்டங்களை நடத்துவது என்பது குறித்து முதல்வா் எடியூரப்பாவிடம் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.

வியாபாரிகள் மற்றும் தொழிலகங்களில் பெயா்ப் பலகைகளில் கன்னடத்தைப் பயன்படுத்த நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை வரவேற்கிறேன். கா்நாடகத்தில் கன்னடம் தான் ஆட்சிமொழி என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனவே, பெயா்ப் பலகைகளை கன்னட மொழிகளில் மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT