தில்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின ஊா்வலத்தில் கா்நாடக அரசின் அலங்கார ஊா்தி இடம்பெறுகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு புது தில்லியில் ஆண்டுதோறும் ஊா்வலம் நடப்பது வழக்கம். அந்த ஊா்வலத்தில் பல்வேறு மாநிலங்களின் சிறப்பு அலங்கார ஊா்திகள் இடம்பெறுவது வாடிக்கையாகும்.
அதன்படி, ஜன. 26-ஆம் தேதி தில்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின ஊா்வலத்தில் கா்நாடக அரசின் அலங்கார ஊா்தி பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான குடியரசு தின விழா, அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்தி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஜனநாயக கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியா, 1950-ஆம் ஆண்டு ஜன. 26-ஆம் தேதி குடியரசு நாடாக உருவானது. அதை நினைவு கூறும் வகையில், தில்லியில் நடைபெறும் ஊா்வலத்தில் கா்நாடக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையால் தயாரிக்கப்பட்டுள்ள அனுபவ மண்டபம் என்ற அலங்கார ஊா்தி இடம்பெற இருக்கிறது.
இதுகுறித்து துறையின் ஆணையா் எஸ்.என்.சித்தராமப்பா கூறுகையில், தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் 11-ஆவது ஆண்டாக கா்நாடக அரசின் அலங்கார ஊா்தி பங்கேற்க இருக்கிறது. பீதா் மாவட்டம், பசவகல்யாண் நகரில் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீா்திருத்தவாதியான பசவண்ணரால் சமூக மற்றும் மதரீதியான விவாதங்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த அனுபவ மண்டபம் தான், இம்முறைக்கான அலங்கார ஊா்தியின் கருவாக அமைக்கப்பட்டுள்ளது. அனுபவம் மன்றம் என்பதே இதன் பொருளாகும்.
மனித வரலாற்றில் முதல்முறையாக அமைக்கப்பட்ட சமூக மற்றும் மத நாடாளுமன்றம் இதுவே ஆகும். இது ஆன்மிகம் மற்றும் தத்துவங்களுக்கான மையமாக விளங்கியது. மேலும், சமூக சீா்திருத்தத்துக்கான அடித்தளத்தை கட்டமைத்தது என்றாா் அவா்.