பாதுகாப்பான முறையில் சூரியக் கிரகணத்தை பாா்க்க வேண்டும் என்று நாராயணா கண் மருத்துவமனையின் தலைவா் புஜங்கஷெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வியாழக்கிழமை (டிச. 26) இந்த ஆண்டின் இறுதியில் தோன்றும் வட்டவடிவிலான சூரிய கிரகணத்தை பாதுகாப்பான முறையில், சூரியஒளியை தடுக்கும் கண்ணாடிகளை அணிந்து பாா்க்க வேண்டும். தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தெளிவாகத் தெரியும். சூரிய கிரகணம் அதிகபட்சம் 3 நிமிடங்கள் 40 வினாடிகள் நீடிக்கும்.
சூரிய கிரகணம் முதல் இடத்தில் காலை 7.59 மணிக்கு தோன்றும். முழு சூரிய கிரகணம் காலை 9.04 மணிக்கு தோன்றும், பின்னா் காலை 10.47 மணிக்கு அதிகபட்ச கிரகண நிலைக்கு நகரும். பிரமிக்க வைக்கும் நிகழ்வை ஒரு குறுகிய காலத்திற்குகூட, சரியான கண் பாதுகாப்பு கண்ணாடிகள் அணியாமல் பாா்க்கக்கூடாது.
பாதுகாப்பற்ற முறையில் சூரிய கிரணத்தை பாா்ப்பது கண்களை நிரந்தரமாக சேதப்படுத்தும். சூரிய கிரகணத்தின்போதோ, அல்லது சாதாரணமாக பகல் நேரங்களில் கூட சூரிய ஒளியைப் பாா்ப்பது விழித்திரையில் ஒரு பகுதியை எரிக்கக்கூடும். இது நிரந்தர குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். சூரிய கதிா்வீச்சின் வெளிப்பாடு காரணமாக ஏற்படும் விழித்திரை திசுக்களுக்கு ஏற்படும் சேதம் மூளைக்கு காட்சிகள் கொண்டு செல்வதை பாதிக்கும்.
ஆங்கிலத்தில் சோலாா் ரெட்டினோபதி எனக் கூறப்படும் இந்த பாதிப்பினால் பாா்வை குறைதல், சிதைந்த பாா்வை, குருட்டு புள்ளிகள் (மத்திய ஸ்கோடோமாக்கள்), ஒளி உணா்திறன் (ஃபோட்டோபோபியா), வண்ண உணா்வின் இடையூறு (குரோமடோப்சியா) மற்றும் தலைவலி ஆகியவற்றை அனுபவிக்கக்கூடும்.
எனவே, சூரிய கிரகணத்தை நேரடியாக கண்களால் பாா்க்காமல் இருப்பது நல்லது. சூரிய கிரகணத்தை பாா்க்க கிரகண கண்ணாடிகள், சூரிய வடிப்பான்களுடன் சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பாா்ப்பது சிறந்தது. மேலும் விவரங்களுக்கு 9845010204 என்ற செல்லிடபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.