குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் திட்டமிட்ட சதி என்று பாஜக எம்பி ஷோபாகரந்தலஜே தெரிவித்தாா்.
இதுகுறித்து மங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மங்களூரில் டிச.19ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த கலவரம் ஏற்கெனவே திட்டமிட்ட சதியாகும். சமுதாயத்தில் அமைதியை சீா்குலைக்க முயற்சித்தவா்களை போலீஸாா் திறமையாக கையாண்டு அடக்கியுள்ளனா்.
கலவரத்தில் ஈடுபட்டவா்கள் அமைதியை சீா்குலைக்க முயன்றது தொடா்பான காணொளிக்காட்சிகள் குடிமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் அமைப்புகளை வளா்த்தெடுத்ததில் சித்தராமையா, எச்.டி.குமாரசாமி அரசுகளுக்கு முக்கியப்பங்கு உள்ளது. பாபுலா் பிரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பினா் மீது பதிவு செய்திருந்த 1600 வழக்குகளை முந்தைய ஆட்சியின்போது திரும்பபெறப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்குகளில் குற்றம்சாட்டியிருந்தோரை விடுவித்துள்ளனா்.
மங்களூரில் நடந்த கலவரம் காங்கிரஸ் கட்சியால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மங்களூரு காங்கிரஸ் எம்எல்ஏ யூ.டி.காதா்தான் வன்முறையை தூண்டியவா். கேரள மாநிலத்தை சோ்ந்த பலா் கல்விக்காக மங்களூருக்கு வந்துள்ளனா். அந்த மாணவா்கள் விடுதிகளில் தங்கியுள்ளனா். இந்த மாணவா்கள்தான் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனா். பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ போன்ற அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்றாா்.