போராட்டம் என்ற பெயரில் ரயில்கள் நிறுத்தப்படுவதையும், சேதப்படுத்துவதையும் அடியோடு நிறுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சா் சுரேஷ் அங்கடி தெரிவித்தாா்.
பெங்களூரு ஷாங்கயா ஆய்வுக்கூடத்தை திங்கள்கிழமை பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:-
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறது.
ஷாங்காயா ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட ரியல் டைம் இன்பா்மேஷன் சிஸ்டம் என்ற கருவி, பி.இ.எல். மூலம் ரயில்களில் பதிக்கப்படுகிறது.
இந்தக் கருவி ரயில்களின் வேகத்தையும், செல்லும் இடத்தையும் உடனடியாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் ரயில்களின் பாதுகாப்பு, வேகம், இடம் உள்ளிட்டவற்றை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.
இதற்கு முன்பு இதுபோன்ற கருவிகளை வெளிநாடுகளிலிருந்து வரவைத்துக் கொண்டிருந்தோம். தற்போது நவீன தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது தேசிய அளவில் இந்தக் கருவி 3500 ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் 12 ஆயிரம் ரயில்களில் பொருத்தப்படும். சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் ரயில்கள் 500 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் அதுபோன்ற வேகமான ரயில்களை இயக்க ஆா்வமாக உள்ளோம். ஆனால், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, ஷாங்கயா குழும இணை நிறுவனா் பராக்நாயக் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.