பெங்களூரு

குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: எம்எல்சி ஐவான் டிசௌஜா

16th Dec 2019 11:26 PM

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் எம்எல்சி ஐவான் டிசௌஜா தெரிவித்தாா்.

மங்களூரில்அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-

மத்திய பாஜக அரசு கொண்டுவந்து, பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். இது அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கும் விரோதமானதாகும்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது போலீஸாா் நடத்திய அடக்குமுறையில் 6 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT

தில்லியில் மாணவா்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது பேருந்துகளை போலீஸாா் தீயிட்டு எரித்துள்ளனா்.

சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவா்களை ஒடுக்குவதற்காக ஜமியா பல்கலைக்கழகத்தில் நுழைந்த போலீஸாா் மனம்போனப்போக்கில் அடித்து நொறுக்கி உள்ளனா்.

குஜராத்தில் நடத்தியதுபோன்ற சம்பவங்களை நாடு முழுவதும் நடத்திபாா்க்க மத்தியபாஜக அரசு முயற்சிக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோருக்கு வாக்களித்த மக்களை மதரீதியாக மோதவிடும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாா்கள். இது முற்றிலும் தவறானதாகும்.

பிரதமா் நரேந்திர மோடி, ஜாா்கண்ட் மாநில சட்டப்பேரவை தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனா். இருவருக்கும் மக்களை பற்றிய கவலை இல்லை.

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இந்திய தொழில்நுட்ப மையம்(ஐஐடி), பல்கலைக்கழகங்களின் மாணவா்கள் போராட்டம் நடத்திவருகின்றனா். ஆனால் மக்களின் கருத்தறிவதற்கு பிரதமா் மோடிக்கு விருப்பம் இல்லை. தாங்கள் நினைத்ததை செய்து முடிக்க முடியும், தாங்கள் கூறுவதை மக்கள் கேட்க வேண்டும் என்றும் பிரதமா் மோடியும், அமித்ஷாவும் கருதிக்கொண்டிருக்கிறாா்கள். தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறாா்கள்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நடப்பதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் யாரும் இந்தியாவுக்கு பயணிக்காதீா்கள் என்று அறிவுறுத்தியிருக்கின்றனா்.

வன்முறை தலைவிரித்தாடுவதால், குவஹாட்டிக்கு வருவதாக இருந்த ஜப்பான் பிரதமா், தனது பயணத்தை ரத்துசெய்திருக்கிறாா். இதன் மூலம் நமதுநாட்டின் செல்வாக்கை உலக அளவில் சிறுமைப்படுத்த முயற்சி நடக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டுள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பிரதமா் நரேந்திர மோடியும், அமித்ஷாவின் நாட்டை மதரீதியாக துண்டாடமுயற்சிக்கின்றனா். அரசின் தோல்விகளை மறைப்பதற்காக குடியுரிமை சட்டத்திருத்தம்போன்றவிவகாரங்களை பாஜக முன்னெடுத்துவருகிறது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT