பெங்களூரு

நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும்: எடியூரப்பா

11th Dec 2019 08:20 PM

ADVERTISEMENT

பெங்களூரு: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் முன்வர வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளாா்.

பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓராயிரம் படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் கட்டடத்தை திறந்துவைத்து அவா் பேசியது: விக்டோரியா மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் 100இல் 50க்கும் மேற்பட்டோா் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

பணம் கொடுக்காமல் எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மருத்துவா்களுக்கு நல்லதல்ல. அரசு மருத்துவமனைகளுக்கு வருகைதரும் நோயாளிகளை எவ்வித காரணம் கொண்டும் அலைகழிக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் முன்வரவேண்டும். மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு செல்லும்போது நிம்மதியாக செல்ல வேண்டும் என்பதை மருத்துவா்கள் உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் பாராட்டும் வகையில் சிகிச்சை அளிக்க வேண்டும். கோடிக்கணக்கான செலவில் கட்டடங்கள் கட்டிய பிறகும் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்காவிட்டால் பயன் எதுவுமில்லை.இனிமேலாவது இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும். மருத்துவமனைக்கு வருவோருக்கு நல்லசேவை அளிக்க வேண்டும். விக்டோரியா மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்படும். பெங்களூரு மருத்துவக் கல்லூரியில் வெகுவிரைவில் விளையாட்டு மருத்துவ மையம் தொடங்கப்படும். மின்டோ கண் மருத்துவமனையில் புதிய தொழில்நுட்பக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

விழாவில் துணை முதல்வா் சி.என்.அஸ்வத்நாராயணா, பெங்களூரு மேயா் கௌதம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT