முந்தைய காங்கிரஸ் அரசு பரிந்துரைத்தது போல கர்நாடகத்துக்கு தனிக்கொடி எதுவும் தேவையில்லை என்று கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முந்தைய காங்கிரஸ் அரசு, கர்நாடக மாநிலத்துக்கு தனிக்கொடிவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தாது. நமது நாட்டுக்கு ஒருகொடி போதுமானது. நாட்டில் கலாசார ரீதியாக பல்வேறு கொடிகள் இருக்கலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்ட ரீதியாக இந்திய நாட்டுக்கு மூவண்ணக்கொடி மட்டுமே உள்ளது.
கலாசார ரீதியாக கொடிகளை வைத்துக்கொள்ள தடையேதுமில்லை. கன்னடக் கொடியை கலாசாரக் கொடியாக கன்னடர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மாநிலத்திற்கென்று தனியாக கொடி தேவையில்லை. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்திலும் இடமில்லை. நமதுநாடு ஒன்று, அதனால் ஒற்றுமையை பற்றிமட்டும் நாம் யோசிக்கிறோம்.
25 பெருமக்களின் பிறந்த நாள் விழாக்களை கர்நாடக அரசு கொண்டாடிவருகிறது. இதை மாறுபட்டரீதியில் கொண்டாட யோசித்துக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களுடனும் கலந்தாலோசிக்க இருக்கிறோம். இந்த விழாக்களை அரசியலாக்கக் கூடாது.
பெருமக்களின் பிறந்த நாள் விழாக்கள் மக்களிடையே கொண்டாடப்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் மட்டுமே கொண்டாடப்படுகிறது. இதை மாற்றியமைக்க வேண்டும். மாவட்ட விழாக்களை கொண்டாடுவதற்குப் பதிலாக, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக மக்களின் கருத்தறிய இருக்கிறோம்.
கர்நாடகத்தில் சுற்றுலாத் துறைக்கு நல்ல வாய்ப்புள்ளது. சுற்றுலாத்தலங்களில் உள்கட்டமைப்புவசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இங்கு அரசு தனியார் கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்க முயற்சிப்போம். சுற்றுலாத் துறையில் முதலீடுகளை ஈர்க்க முற்படுவோம். தங்கத்தேர் சொகுசு ரயில் திட்டத்தால் மாநில அரசுக்கு ரூ.41கோடி இழப்பு என்பதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார்.