கர்நாடகத்தில் பாஜகவை பலப்படுத்த உழைப்பேன் என்று அக்கட்சியின் புதியத் தலைவர் நலீன்குமார் கத்தீல் தெரிவித்தார்.
மங்களூரில் வியாழக்கிழமை மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று அவர் பேசியது: சங்பரிவாரத்தின் உண்மையான தொண்டனாக, என்னை 3 முறை எம்பியாக தேர்ந்தெடுத்த தென்கன்னட மாவட்ட மக்களில் ஒருவராக கர்நாடகத்தில் பாஜகவை ஒன்றுபடுத்த, பலப்படுத்த தீவிரமாக உழைப்பேன்.
எனக்கு எந்தபதவி வழங்கப்படுகிறது என்பதை பொருள்படுத்தாமல் கட்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள மாநிலத் தலைவர் பதவி மிகவும் பொறுப்பு வாய்ந்தது. இந்த பதவியை முதல்வர் எடியூரப்பாவின் ஒத்துழைப்பு, ஆதரவுடன் சிறப்பாக செயல்படுத்துவேன் என்றார். விழாவில் மாவட்ட பாஜக தலைவர் பிரதாப்சிம்ஹா நாயக், மீன்வளத் துறை அமைச்சர் கோட்டாசீனிவாஸ் பூஜாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.