கர்நாடகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசுடன் தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் பெங்களூரு மேயர் கங்காம்பிகே.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் புதன்கிழமை ஹோமியோகேர் மருத்துவக் குழுமம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட கர்நாடக மக்களுக்கு மருந்து, மாத்திரை, கல்வி உபகரணங்களை கொண்டு செல்லும் வாகனத்தை தொடக்கிவைத்து அவர் பேசியது: அண்மையில் பெய்த பலத்த மழையால் வட கர்நாடகம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தொற்று நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அரசு மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படவேண்டும்.
பெரு நிறுவனங்கள் நிவாரணத்துக்கு நிதி வழங்க யோசித்து வரும் நிலையில், ஹோமியோகேர் மருத்துவக் குழுமத்தினர் மருந்து, மாத்திரை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவைகளை வழங்க முன்வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. வட கர்நாடகம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் மக்கள் வீடு,வாசல் மட்டுமின்றி சுகாதாரத்தையும் இழந்துள்ளனர். மாணவர்கள் கல்வி பயில முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திரா உணவகத்தால் பல லட்சம் பேர் குறைந்த கட்டணத்தில் பசியைப் போக்கி வருகின்றனர். இதனை மூட மாநில அரசு முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இந்திரா உணவகத்தை மூட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கடந்த காங்கிரஸ், மஜத கூட்டணி அரசில் பட்ஜெட்டில் இந்திரா உணவகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. அப்போதைய துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், இந்திரா உணவகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கித் தருவதாக கூறியிருந்தார். ஆனால், கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில், புதிய அரசு இந்திரா உணவகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கும் என்று நம்புகிறோம். ஒதுக்க மறுத்தாலும், மாநகராட்சியே இந்திரா உணவகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.