கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முயற்சிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெற நான் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. காந்தி குடும்பத்துக்கு நான் விசுவாசியாக இருக்கிறேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். பிறர் என்ன கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், கர்நாடக காங்கிரஸ் தலைவர் போட்டியில் நான் இல்லை. நான் எந்த பதவியையும் கேட்டுபெறுவதில்லை. காந்தி குடும்பத்தின் தலைமையில் நம்பிக்கை உள்ளது.
கடந்த காலங்களில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்திருக்க வேண்டும். அப்போதே எனக்கு அப்பதவியை வழங்கவில்லை. இந்நிலையில் தற்போதைய நிலையில் எனக்கு அப்பதவி குறித்த கவலையில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாத லட்சுமண் சவதி, தற்போது துணை முதல்வராக இருக்கிறார். இதுதான் விதி என்பது. அதற்காக அவரை வாழ்த்துகிறேன்.
காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக சித்தராமையா உள்ளார். எனவே, எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யலாம். நான் சித்தராமையா உள்ளிட்ட யார் மீது இலகுவான விமர்சனங்களை வைப்பதில்லை. சித்தராமையா தலைமையின்கீழ் நான் பணியாற்றியுள்ளேன். எனவே, அவரை பற்றி நான் தரக்குறைவாக பேசியதில்லை.
கர்நாடகத்தில் வெகுவிரைவில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்கலாம் என்று சித்தராமையா கூறியிருக்கிறார். ஆனால், இதில் அவசர முடிவு தேவையில்லை. பாஜகவினர் தற்போதுதான் ஆட்சி செய்ய தொடங்கியுள்ளனர். அதிருப்தியடைந்த, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எப்போது அமைச்சராகப் போகிறார்கள் என்று காத்திருக்கிறேன் என்றார்.