பெங்களூரு மாமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் கங்காம்பிகே தெரிவித்தார்.
பெங்களூரு மாநகராட்சி மாமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மேயர் கங்காம்பிகே தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிகாரிகள் வருகை குறைவாக இருந்ததையடுத்து, அதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர் குணசேகர் கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் கங்காம்பிகே அளித்த பதில்:
மாநகராட்சியில் மாதாந்திரம் கூட்டம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அனைத்து துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் வருகை புரிய வேண்டும். ஆனால், அதிகாரிகள் அமரும் மாடத்தில் ஒரு சில அதிகாரிகள் மட்டுமே வந்துள்ளனர். பெரும்பாலான அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துள்ளனர். உரிய காரணமில்லாமல் மாமன்றக் கூட்டத்துக்கு வராத அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்க ஆணையருக்கு பரிந்துரை செய்கிறேன். அதிகாரிகள் யாராக இருந்தாலும் கடமை தவறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.