பேருந்துகளில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் அபராதமாக ரூ.7.35 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களின் நலன் கருதி, கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு
வருகின்றன.
இந்தப் பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனை கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்டது. 46,458 பேருந்துகளில் சோதனை நடத்தியதில், போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக 4,844 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இதனடிப்படையில், பயணச் சீட்டில்லாமல் பயணித்த 5,935 பேரிடம் இருந்து ரூ.7,35,523 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே,பயணிகள் பேருந்தில் பயணிக்கும் கட்டணத்தை செலுத்தி தகுதியான பயணச் சீட்டை வைத்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.