மாணவர்களுக்கு தொழில்திறனை கல்வியாகப் போதிப்பது அவசியம் என்று கர்நாடக மாநில ஜவுளி வளர்ச்சித் துறையின் ஆணையர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார்.
பெங்களூரு ராமையா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில் இளங்கலை பட்டப்படிப்பைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:-
மாணவர்கள் கல்வி பயிலுவது எவ்வளவு முக்கியமோ அதே போல அவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான தொழில்திறன் கல்வியைப் போதிப்பது அவசியம்.
சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதால், பட்டப்படிப்புக்குப் பின்னர் தொழில்முனைவோர் ஆவதற்கான திறனை மாணவர்கள் வளர்த்துகொள்ள வேண்டும்.
ஜவுளித்துறையில் பல்வேறு பிரச்னைகளையும், சவால்களையும் சந்தித்து வருகிறோம். அதனைத் தீர்க்க மாணவர்கள் தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டும். ஜவுளித்துறையில் உள்ள திடக்கழிவு மேலாண்மையை அழிப்பதற்கான தீர்வுகளையும் கண்டறிய வேண்டும். விவசாயத்துக்கு அடுத்தப்படியாக ஜவுளித்துறையில் ஏராளமானவர்கள் உள்ளனர். அதிலும், பெண்கள் அதிக அளவில் ஜவுளித்துறையில் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் பெண்களுக்கு ஜவுளித்துறையில் பயிற்சி அளிக்க ரூ. 27 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதன்மூலம் சுமார் 82 ஆயிரம் பேர் பயிற்சி அளிக்கப்பட்டது. கல்வி அறிவு குறைவாக உள்ள பெண்களும் இதனால் பலன் அடைந்துள்ளனர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ராமையா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் சிவகுரு ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.