பெங்களூரு தமிழ்ச் சங்கத்தினர் குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்டதன் விளைவாக, சங்கம் முடங்கிப் போயுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பெங்களூரில் உள்ள தூய சூசையப்பர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் தண்.கி.வெங்கடாசலம், டாஸ்கர் நகர் மாநகராட்சிப் பள்ளி தமிழ்ஆசிரியர்கள் க.சுப்பிரமணியன், மா.சிவசங்கரன், கணக்கு ஆசிரியர் தி.ச.ஆறுமுகம், மருத்துவர் த.இராமன், வே.இரா.கோவிந்தராசன், அ.கிருட்டிணமூர்த்தி ஆகிய 7 பேர் கூடி 1950-ஆம் ஆண்டில் தமிழ்ப் படிப்புக் குழுவை அமைத்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்ச் சமூகத்தின் மொழி, கலை, இலக்கிய, பண்பாட்டு அடையாளங்களைக் கட்டிக்காக்கும் நோக்கில் "பெங்களூரு தமிழ்ச் சங்கம்' என பெயர் மாற்றம் செய்தனர்.
10 ஆண்டுகாலம் திறம்பட செயல்பட்ட சங்கமானது 1960-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி சட்டப்படி பதிவு செய்யப்பட்டு, தமிழ் மொழி, தமிழர் கலை, இலக்கிய, பண்பாடு ஆகியவற்றை வளர்ப்பதும், தமிழர் நலனை காப்பதும் தமிழுக்கும் கன்னடம் முதலான பிறமொழிகளுக்குமிடையே சீரான உறவை வளர்ப்பதும் சங்கத்தின் குறிக்கோள்களாக வகுக்கப்பட்டன. இதற்காக எத்தகைய ஜாதி, நிற, மத வேறுபாடுகள் இன்றியும், எந்த அரசியல் சார்புமின்றியும் செயல்படும் என்று நோக்கக்குறிப்பு, விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் தேர்தல்
நடைபெறாத நிலை: 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி ஆட்சிமன்றக் குழு, செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில், 2018-20-ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் 2018-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனுதாக்கல் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 13-ஆம் தேதி நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையில், என்.சிவா உள்ளிட்டோர் அளித்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனிடையே, சங்கத்தை கர்நாடக அரசின் நிர்வாகத்துக்குக் கொண்டு வந்த மாநில அரசு, நிர்வாகியை நியமித்துள்ளது.
2019-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி பெங்களூரு தமிழ்ச்சங்க அரசு நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட சி.பிரசாத் ரெட்டிக்கு பதிலாக, ஜூலை 14-ஆம் தேதி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் டி.எஸ்.அஸ்வத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுமா?
இதனிடையே வழக்கை விசாரித்தகர்நாடக உயர்நீதிமன்றம், முறைகேடுபுகார்களை விசாரித்து அடுத்த 3 மாதங்களுக்குள் சங்க ஆட்சிமன்றக்குழுவுக்கு தேர்தல் நடத்தவேண்டும் என்று ஜூன் 20?ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் பார்த்தால், செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் பெங்களூரு தமிழ்ச்சங்க ஆட்சிமன்றக் குழுவுக்குத் தேர்தல் நடத்திட வேண்டும். தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை 21 நாள்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. இது கர்நாடகத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வுகான வேண்டும் என்ற எண்ணம் தமிழர்களிடையே பரவலாக காணப்படுகிறது.
இதுகுறித்து டாக்டர் டி.மகேந்திரன் கூறியது:-
தமிழ்ப் பதாகைகள் கிழிப்பு, தமிழில் பேசுவதற்கு மறைமுக மிரட்டல், தமிழ்ப் பாடல்களை பாடுவதற்கு கடும் எதிர்ப்பு போன்றபிரச்னைகளைத் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளனர். கர்நாடகத்தில் இரண்டாம்தர குடிமக்களாகத் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர்.
சமூக, பொருளாதார, அரசியல்ரீதியாக தமிழர்கள் ஒடுக்கப்பட்டுள்ள நிலையை உணரலாம். இதுபோன்ற சூழ்நிலையில், சங்க நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் குறைகளை கூறிக் கொண்டு, நீதிமன்றம் வரைசென்றுள்ளனர். எத்தனை குறைகள் இருந்தாலும், பொதுக்குழுவில் பேசி தீர்த்திருக்க வேண்டும். கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
சங்கம் பலவீனப்பட்டு கிடப்பது, கர்நாடகத் தமிழர்களின் நலனுக்கு நல்லதல்ல. பதவி மோகத்தால் குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்டதன் விளைவாக, சங்கம் முடங்கியுள்ளது.
கடந்த 6 மாதங்களாக சங்கம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருவது தமிழர்களுக்கு அவமானமாக இல்லையா?
உயர்நீதிமன்றம், மாவட்ட துணைப்பதிவாளர் முன்பிருக்கும் வழக்குகளை திரும்பபெற்று, 2018-20-ஆம் ஆண்டுக்கான தேர்தலை நடத்த தீவிர முயற்சியில் இறங்க வேண்டும்.
நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்னையைத் தீர்த்துகொண்டு ஜனநாயகமுறையில் தேர்தலை நடத்தி, தகுதியானவர்களை ஆட்சிக்குழு, செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்து சீரான நிர்வாகத்தை அளிக்க வேண்டும்.
தேர்தலில்போட்டியிட விரும்புவோர் உறுதியான எண்ணத்தை மனதில் விதைத்துகொள்ள வேண்டும்" என்றார்.