பெங்களூரு

தசரா விழாவில் பங்கேற்க மைசூரு புறப்பட்ட யானைகள்!

23rd Aug 2019 08:36 AM |  மைசூரு,

ADVERTISEMENT

தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக நாகரஹொளே காட்டில் இருந்து மைசூரு சென்ற யானைகளுக்கு வழியனுப்பும் விழா நடைபெற்றது.
 உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா செப்.29 முதல் அக்.8-ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. தசரா விழாவின் இறுதிநாளான அக்.8-ஆம் தேதி யானை ஊர்வலம் இடம்பெறுகிறது. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து யானை அர்ஜுனா ஊர்வலத்தை வழிநடத்தி செல்லும். இதை பின்தொடர்ந்து பல யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும். இந்த காட்சியை காண உலகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் மைசூரில் குவிந்திருப்பார்கள்.
 தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகள் அர்ஜுனா, அபிமன்யூ, வரலட்சுமி, தனஞ்செயா, விஜயா, ஈஸ்வரா ஆகிய 6 யானைகளும் வியாழக்கிழமை மைசூரை நோக்கி புறப்பட்டன. மைசூர் மாவட்டம், நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில் வீரனஹொசஹள்ளி வனப்பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் ஆர்.அசோக், வி.சோமண்ணா ஆகியோர் சிறப்புபூஜை செய்து யானைகளை உற்சாகமாக வழியனுப்பிவைத்தனர்.
 இவ்விழாவில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஏ.ராமதாஸ், எல்.நாகேந்திரா, மாவட்ட ஆட்சியர் அபிராம்சங்கர், மைசூரு மேயர் புஷ்பலதா ஜெகநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளுக்கு வெல்லம், தேங்காய், கரும்பு உள்ளிட்ட தின்பண்டங்கள் வழங்கப்பட்டன.
 லாரியில் 60 கி.மீட்டர் பயணம் மேற்கொள்ளும் யானைகள், வெள்ளிக்கிழமை மைசூரை வந்தடைகின்றன. மைசூரில் உள்ள வன மாளிகையில் நடைபெறும் விழாவில் யானைகளை அமைச்சர்கள் ஆர்.அசோக், வி.சோமண்ணா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள். பின்னர், ஆக.26ஆம் தேதி அரண்மனை வளாகத்துக்கு அழைத்துவரப்பட்டு அங்குள்ள யானைகள் முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றன. தசரா திருவிழா முடிந்த பிறகு மீண்டும் காடுகளுக்கு யானைகள் அனுப்பிவைக்கப்படும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT