பெங்களூரு

"காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முடிவு'

16th Aug 2019 08:50 AM

ADVERTISEMENT

காஷ்மீரில் நடந்துவந்த பயங்கரவாத ஆளுமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
 கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை:
 இன்றைய சுதந்திர தினவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவின் மணிமகுடம் காஷ்மீராகும். கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீரில் நடந்தவைகளை கற்பனை செய்துபார்க்க முடியாது. இந்தியாவின் பண்பாட்டு தொட்டிலாக விளங்கிய காஷ்மீருக்கு ஒற்றை பண்பாடு இருப்பதாக பறைச்சாட்டப்பட்டு, அம்மண்ணின் மைந்தர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள்.
 இப்பகுதியின் 3 மாவட்டங்களை தேசவிரோத, பயங்கரவாத சக்திகள் அடக்கி தங்கள்கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இங்கு அமைதி எட்டாக்கனியாக இருந்து வந்தது. எல்லையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த வீரர்கள் நமது நாட்டுமக்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். காஷ்மீரின் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. அங்கு இந்தியாவின் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக, அண்மை நாட்டின் கொடியை ஏற்றும் நிலை இருந்தது.
 காஷ்மீரில் நடந்துவந்த பயங்கரவாத ஆளுமை, பிரதமர் மோடியின் துணிச்சலான வரலாற்று சிறப்புமிக்க முடிவால் முடிவுக்கு வரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி ஸ்ரீநகரின் லால்சதுக்கத்தில் இந்தியாவின் மூவண்ணக் கொடியை அன்றைய பாஜக தேசிய தலைவர் முரளி மனோகர்ஜோஷி ஏற்றிவைத்தது என் நினைவில் உள்ளது.
 இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை பி.ஆர்.அம்பேத்கர், 370ஆவது உட்பிரிவை ஏற்படுத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்று கூறியிருந்தார். தற்போது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370, 35ஏ அடியோடு நீக்கப்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
 இதன்மூலம் அந்த யூனியன் பிரதேசங்கள் எல்லாமுனைகளிலும் முன்னேற்றம் காணும். காஷ்மீரில் இனி அண்டை நாடு தலையிட முடியாது. அங்கு நடந்துவந்த பயங்கரவாத நடனம் முடிவுக்கு வந்துள்ளது. அமைதி, ஒழுங்கு நிலைபெறும். குடிமக்களும் பயமின்றி வாழலாம். அப்பகுதியில் இருந்து வெளியேறிய பண்டித்கள், சொந்த நாட்டில் அகதிகளை போல அஞ்ச வேண்டியதில்லை.
 பிரதமர் மோடி எடுத்த முடிவை இந்தியாவும், உலகமும் போற்றி வரவேற்றுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் பிரதமர் மோடிநிலைத்துவிட்டார். இதன்மூலம் ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா, அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட லட்சக்கணக்கான இந்தியர்களின் எண்ணம் ஈடேறியுள்ளது. இதன் மூலம் அகண்ட இந்தியா என்ற கனவும் நனவாகியுள்ளது. எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு தினமும் ஏதாவது செய்ய வேண்டும் என்றார்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT