பெங்களூரு

கர்நாடக வெள்ளச்  சேதத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முதல்வர் எடியூரப்பா கோரிக்கை

11th Aug 2019 03:36 AM

ADVERTISEMENT


 கர்நாடக வெள்ளச்  சேதத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்து பெங்களூரு, கிருஷ்ணா அரசினர் இல்லத்தில் சனிக்கிழமை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  கர்நாடகத்தில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இயற்கைப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.  வட கர்நாடகம், கடலோர கர்நாடகம், மலைநாடு கர்நாடகப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்ந்தவண்ணம் உள்ளன.  இது மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. மக்களின் சொத்துகள், பொது சொத்துகள் நாசமாகியுள்ளன.
மாநிலத்திலுள்ள 30 மாவட்டங்களில் 16-இல் தீவிர மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  16 மாவட்டங்களின் 80 வட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கருணைத்தொகையாக அளிக்கப்படும்.  மாநிலம் முழுவதும் 1,024 கிராமங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருள் சேதம் ஆகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  எனவே, வெள்ள நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் கோடியை அளிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியிருந்த 2,35,105 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்பட்டுள்ளனர்.  222 கால்நடைகள் இறந்துள்ளன.  44,013 கால்நடைகள் ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.  மாநிலத்தில் 624 மறுவாழ்வு மையங்களைத் திறந்திருக்கிறோம். இம் மையங்களில் உணவு, உடை, போர்வை, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.  இம் மையங்களில் 1,57,498 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 3,22,448 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த விளைபொருள்கள் மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.  ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.  இதுவரை 12,651 வீடுகள் சேதமடைந்துள்ளன. 
கடந்த வாரம் வட கர்நாடகத்தில் வெள்ள ஆபத்து இருப்பதை அறிந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சியில் கலந்தாலோசித்தேன்.  ஆக. 5-ஆம் தேதி முதல் ராய்ச்சூரு, யாதகிரி, விஜயபுரா, பாகல்கோட், கதக், பெலகாவி மாவட்டங்களில் விமானம் மூலமாக வெள்ள சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தேன்.  அதைத் தொடர்ந்து,  புது தில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரைச் சந்தித்து கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை விவரித்தேன்.  மேலும்,  நிவாரண நிதி ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
    கடந்த 4 நாள்களாக ஹாசன், சிவமொக்கா, சிக்மகளூரு, குடகு, தென்கன்னடம், வடகன்னடம் மாவட்டங்களில் வெள்ளச் சூழ்நிலை தீவிரமடைந்துள்ளது.  மங்களூருக்குச் செல்லும் சாலை, ரயில் பாதை முழுமையாக மூடப்பட்டுள்ளன.  குடகு, வட கன்னடம் போன்ற மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று வெள்ளப் பாதிப்புகள்,  நிவாரண உதவிகளை ஆய்வு செய்தேன்.  புது  தில்லி பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு கர்நாடகம் திரும்பி பெலகாவி,  பாகல்கோட்,  கதக்,  தார்வாட் மாவட்டங்களில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தேன்.
மகாராஷ்டிரத்தில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைத் தொடர்ந்து கண்காணித்து,  அதனால் கிராமங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  வட கர்நாடகத்திலும் மலைநாடு பகுதியில் உள்ள அணைகளுக்கு வரும் நீர்,  வெளியேற்றப்படும் நீரைக் கண்காணித்து வருகிறோம்.  ஹேமாவதி,  துங்கபத்ரா அணைகளில் இருந்து கால்வாய்களுக்கு நீர் விடப்படும்.  நாராயணாபுரா அணைக்கு விநாடிக்கு 5.5 லட்சம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.  
அதில் இருந்து ரூ.5.4  லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  அல்மாட்டி அணைக்கு விநாடிக்கு 5.15 லட்சம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தால்,  5 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 1.1 லட்சம் கன அடி நீர் வந்தால், அணையில் இருந்து விநாடிக்கு 441 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு விநாடிக்கு 1,12,511 நீர் வந்துகொண்டிருந்தால்,  அதிலிருந்து விநாடிக்கு 1,02,083 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஹாரங்கி அணைக்கு விநாடிக்கு 18,560 கன அடி நீர் வந்துகொண்டிருக்க, விநாடிக்கு 16,041 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஹேமாவதி அணைக்கு விநாடிக்கு 1,13,435 கன அடி நீர் வந்துகொண்டிருக்க, விநாடிக்கு 50,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு ராணுவம், விமானப்படை,  கப்பற்படையின் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தற்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 20 அணிகள்,  ராணுவத்தின் 11 அணிகள்,  கப்பற்படையின் 5 அணிகள், விமானப் படையின் 4 அணிகள், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் 2 அணிகள், தீயணைப்புப் படையினர்,  காவல் துறையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி அளித்திருக்கிறோம்.  மேலும், நிதி ஒதுக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.  வெள்ளத்தால் ஏற்படும் சங்கடங்களை மக்கள் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசு துணை நிற்கிறது.  கர்நாடக மக்களும் துன்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் இருக்கிறார்கள்.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
அப்போது, தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT