விஸ்வேஷ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் பார்வை நேரம் விடுமுறை நாள்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ள விஸ்வேஷ்வரய்யா தொழில் மற்றும் நுட்ப அருங்காட்சியகம் கடந்த 52 ஆண்டுகளாக அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளில் தனி காட்சி அரங்குகளை உருவாக்கி, மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் பெங்களூருக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் விஸ்வேஷ்வரய்யா அருங்காட்சியகத்தை பார்த்து வருகின்றனர். வாரத்தின் 6 நாள்களும் தினமும் காலை 9.30மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டிருக்கும்.
ஒருசில நேரங்களில் வெளியூர்களில் இருந்துவருவோர் அருங்காட்சியகத்தை முழுமையாக பார்க்கமுடியாத சூழ்நிலை உருவாவதை கருத்தில் கொண்டு சனி, ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் பார்வையிடும் நேரத்தை 2 மணி நேரம் நீட்டித்துள்ளது. அதன்காரணமாக, வார இறுதிநாட்களில் காலை 9.30மணி முதல் இரவு 8 மணி வரை அருங்காட்சியகத்தை திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.