பெங்களூரு

விவசாயிகளைப் பாதுகாக்க பட்ஜெட்டில் திட்டம் இல்லை: முன்னாள் முதல்வர் சித்தராமையா

6th Jul 2019 09:24 AM

ADVERTISEMENT

மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளைப் பாதுகாக்க எவ்வித திட்டம் இல்லை என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகக் கூறியிருந்தது. அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேறாமல் உள்ளது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது விவசாயிகளுக்கு உதவாத நிதிநிலை அறிக்கையாகும். மழையில்லாமல், விளை பொருள்களுக்கு போதிய விலை இல்லாமல் விவசாயிகள் இன்னலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய நிதிநிலை அறிக்கையில் நிலையான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் நான் முதல்வராக இருந்தபோது தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடனை ஒருமுறை மட்டும் தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அதை அப்போதே பிரதமர் மோடி ஏற்கவில்லை. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி எந்த தகவலும் இல்லை. கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் பரிதாபநிலையில் இருந்தும் விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய நிதிநிலை அறிக்கையில் எந்த திட்டமும் இல்லை.
வேலைவாய்ப்பின்மையை ஒழிப்பதற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. 40 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுவதை சில மாதங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியபோது அதை ஏற்காத மத்திய அரசு, தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் வேலைவாய்ப்பின்மை அதிகமானது. சிறுதொழில்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. தற்போது தாக்கல் செய்துள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறுதொழிலுக்கு ஊக்கம் அளிப்பதாகக் கூறியிருப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்ணாக இருந்தும் பெண்கள் முன்னேற்றத்துக்கு புதிதாக எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. நீர்ப்பாசனத்துக்காக தனித்துறையை மத்திய அரசு தொடங்கியிருந்தபோதும், கடந்த 5 ஆண்டுகளில் வெறும் ரூ.433 கோடி மட்டுமே செலவிட்டுள்ளனர். நீர்ப்பாசனத்துக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்காததால் விவசாயம் குன்றியுள்ளது.
தோட்டக்கலைத் துறைக்கு எந்த திட்டமும் இல்லை. தேசிய சுகாதாரத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. 
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உற்பத்திவிகிதம்(ஜிடிபி)படுவீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.விவசாயத்தில் போதுமான முதலீடுக்கு வழியேதும் கூறப்படவில்லை.விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நிலையான விலை பெற உத்தரவாதம் எதுவும் அளிக்கப்படவில்லை.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தியுள்ளது சரியான நடவடிக்கை அல்ல. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். மத்திய நிதிநிலை அறிக்கை வாயிலாக ஆசை வார்த்தைகளை உதிர்த்துள்ளனர். அலங்காரப் பேச்சுகளால் மக்களைக் கவர முயற்சித்துள்ளனர். ஆனால், மத்திய நிதிநிலை அறிக்கையில் வார்த்தைகளால் விளையாடுவதால் மட்டுமே நாடு முன்னேற்றம் அடைந்துவிடாது. மொத்தத்தில் அனைத்துதரப்பு மக்களுக்கும் ஏமாற்றத்தையும், நம்பிக்கையற்ற  சூழலையும் மத்திய நிதிநிலை அறிக்கை விதைத்துள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT