ஆடிப்பட்ட ஆமணக்கு சாகுபடி 

மானாவாரி பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், எண்ணெய் வித்து பயிர்களில் ஒன்றான ஆமணக்கை ஆடிப்பட்டத்தில் தேர்வு செய்து நிகர லாபம் பெறலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆடிப்பட்ட ஆமணக்கு சாகுபடி 


திருச்சி: மானாவாரி பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், எண்ணெய் வித்து பயிர்களில் ஒன்றான ஆமணக்கை ஆடிப்பட்டத்தில் தேர்வு செய்து நிகர லாபம் பெறலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
பருவம் மற்றும் ரகங்கள்: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆமணக்கு சாகுபடி செய்யலாம். ஆடிப்பட்டமான ஜூன், ஜூலை மாதங்களில் டிஎம்வி- 5, டிஎம்வி- 6 ஆகிய ரகங்களையும், கலப்பினத்தில் டிஎம்விசிஹெச்- 1, ஒய்ஆர்சிஹெச்- 1 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்வது சிறந்தது.
இறவைப் பயிராக இருந்தால் வைகாசிப் பட்டம் (மே - ஜூன்), கார்த்திகைப் பட்டம் (நவம்பர் - டிசம்பர்), பங்குனிப் பட்டம் (மார்ச் - ஏப்ரல்) ஆகிய மூன்று பட்டங்களிலும் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ஒய்ஆர்சிஹெச் 1 ரகம் சிறந்தது. தோட்ட நிலங்களில் வரப்பு பகுதிகளில் பல்லாண்டு பயிராக சிஓ- 1 ரகத்தை பயிரிடலாம்.
நிலம் தயாரித்தல்: அமில நிலங்களைத் தவிர பிற நிலங்களில் ஆமணக்கு பயிரிடலாம். நாட்டுக் கலப்பையினால் இரண்டு அல்லது மூன்று தடவை உழவு செய்ய  வேண்டும்.
விதையும் விதைப்பும்: மானாவாரி மற்றும் இறவைப் பயிரில் 90-க்கு 60 செ.மீ என்ற இடைவெளியிலும், கலப்பினமாக இருந்தால் 120-க்கு 90 செ.மீ. இடைவெளியிலும் விதைப்பு செய்ய வேண்டும். இறவையில் 150-க்கு 120 செ.மீ. இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும். இறவையில் களிமண் உள்ள பகுதிகளுக்கு 150-க்கு 150 செ.மீ. அகன்ற இடைவெளி அளிக்க வேண்டும். டிஎம்வி 5 குறுகிய கால ரகத்துக்கு 60-க்கு 30 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.
தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்தல்: சிறந்த தரமான விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்கள் தாக்கிய மற்றும் உடைந்த விதைகளை நீக்கி விடவேண்டும்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரவம் அல்லது கார்பென்டாசிம் கலந்து 4 மணிநேரம் வைத்திருந்து விதைப்பு செய்ய வேண்டும். மானாவாரி பகுதியில் விதைப்புக்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் 1 சதவீதம் பொட்டாசியம் 
குளோரைடு கொண்டு விதை நேர்த்தி செய்து விதைகளை பருவமழை தொடங்கும் முன் விதைக்க வேண்டும்.
விதைப்பு: விதைகளை வேளாண்மைத்துறை பரிந்துரைத்துள்ள இடைவெளியில் விதைக்க வேண்டியது அவசியம். விதைகளை 4-க்கு 6 செ.மீ ஆழத்தில் விதைப்பு செய்ய வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது.
பாடு நிரப்புதல்: விதைத்த 15-ஆம் நாள் பாடு நிரப்ப வேண்டும். அப்போதே குழிக்கு ஒரு செடி வீதம் விடுத்து பயிர் கலைத்தல் வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: உழவு செய்யப்படாத நிலத்தில் ஹெக்டேருக்கு 12.5 டன் மக்கிய தென்னை நார்க்கழிவு பரப்பி உழவேண்டும். மண் பரிசோதனைப் படி உரங்கள் இடவேண்டும். மண்பரிசோதனை செய்யாவிட்டால், கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 30 கிலோ கந்தகத்தை ஜிப்சம் மூலம் இடுவதால் அதிக மகசூல் பெறலாம்.
மானாவாரி பகுதிகளில் 100 சதவீதம் மணிச்சத்து மற்றும் 50 சதவீதம் தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள அளவுகளை ஒன்று அல்லது இரண்டு முறை தகுந்த ஈரப்பதத்தில் மேலுரமாக இடவேண்டும்.
இறவை பகுதிகளில், 100 சதவீதம் மணிச்சத்து மற்றும் 50 சதவீதம் தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். 
மீதம் உள்ள தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து விதைத்த 30 மற்றும் 60-ஆவது நாளில் இட வேண்டும். ஹெக்டேருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட்டும் 25 கிலோ பெரஸ் சல்பேட்டும் இட வேண்டும்.
களை நிர்வாகம்: ஹெக்டேருக்கு பென்டிமெத்தாலின் 3 லிட்டர் அல்லது ப்ளுக்ளோரலின் 2 லிட்டரை விதைத்த 3 -ஆம் நாளில் களை முளைக்கும் முன் தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து விதைத்த 20 மற்றும் 40-ஆவது நாளிலும் கைகளால்  களை எடுக்க வேண்டும்.
ஊடு பயிரிடுதல்: ஒவ்வொரு 6 வரிசை நிலக்கடலைக்கு இடையே ஒவ்வொரு வரிசை ஆமணக்கு பயிரிட வேண்டும். பருவமழை தாமதமாக கிடைக்கும் பகுதியில், உளுந்து மற்றும் ஆமணக்கை 6:1 என்ற விகிதத்தில் பயிரிடலாம் அல்லது ஆமணக்கை உளுந்து அல்லது பச்சைப்பயறோடு 1:2 என்ற விகிதத்தில் மானாவாரி பகுதிகளில் பயிரிடலாம். 
இறவையில் ஆமணக்கை வெங்காயத்தோடு 1:2 என்ற விகிதத்தில் 1.5 மீ-க்கு 1 மீ இடைவெளியில் பயிரிடலாம்.
அறுவடை: பயிரின் வயதினைக் கணக்கில் கொண்டு அறுவடை மேற்கொள்ளவேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம். முற்றிய விதைக் காத்தை இதர கொத்துகளைப் பாதிக்காதவாறு அறுவடை செய்யவும். விதைகளை நிழலில் குவித்து வைக்காமல் சூரிய ஒளியில் உலர்த்தவும். காய்ந்த கொத்தை குச்சியால் அடித்து விதை முத்துகளை பிரித்தெடுத்து, காற்றில் வீசி தூசியை நீக்கலாம் அல்லது விதைப் பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com