பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்

வறண்ட வானிலை காரணமாக பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதால், அவற்றைப் பாதுகாக்கும்
பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்


நீடாமங்கலம் : வறண்ட வானிலை காரணமாக பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதால், அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் ராஜா. ரமேஷ் மற்றும் ஆ. பாஸ்கரன் ஆகியோர் கூறியது:
வறண்ட வானிலை நிலவும் காலங்களில் பருத்தியானது பல்வேறு வகையான மாவுப் பூச்சியின் தாக்குதலுக்கு உள்ளாகும். அவற்றுள் பப்பாளி மாவுப்பூச்சி (வெள்ளை நிறத்தில் காணப்படும்), பருத்தி மாவுப்பூச்சி (இள மஞ்சள் நிறத்தில் காணப்படும்), இளம் சிவப்பு மாவுப்பூச்சி மற்றும் வால் மாவுப்பூச்சி ஆகியவை மிக முக்கியானவையாகும்.
மாவுப்பூச்சி தாக்குதலுக்கான காரணிகள்:
 வறண்ட வானிலையும், அதிகமான வளிமண்டல வெப்ப நிலையும் தாக்குதலுக்கான முதன்மையான காரணிகளாகும். 
மாவுப்பூச்சியைச் சுற்றியுள்ள மெழுகுப் படலமானது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளிடமிருந்து அவற்றுக்கு பாதுகாப்பு அளித்து காக்கிறது.
 மாவுப்பூச்சி பரவும் வழிகள்:
காற்று, மனிதர்கள், பறவைகள் மூலமாகவும், நீர்ப்பாசனம் செய்யும்போதும் பண்ணைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள், தாக்கப்பட்ட நடவுப் பொருள்கள் ஆகியவற்றை வேறோர் இடத்துக்கு கொண்டு செல்வதாலும் இவை எளிதில் பரவுகின்றன. 
எறும்புகளின் நடமாட்டத்தைப் பார்த்து இவற்றின் தாக்குதலை உறுதி செய்யலாம். எறும்புகள் இந்த மாவுப்பூச்சிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு இடம்பெயர்வதற்கு உதவிபுரிகின்றன.
அறிகுறிகள்: பஞ்சுபோல் படர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சிக் கூட்டங்கள் இலைகள், இளம் தண்டுகளில் பரவலாகக் காணப்படும். இலை மற்றும் தண்டின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து, மடங்கி மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்துவிடும். 
தாக்கப்பட்ட செடியானது வளர்ச்சியின்றி குட்டையாகக் காணப்படும். இப்பூச்சிகள் வெளியேற்றும் தேனை உண்பதற்கு எறும்புகள் செடியின் மேல் ஊர்ந்து செல்வதைக் காணலாம். மேலும், கேப்னோடியம் என்ற பூஞ்சாணம் இலையின் மேற்பரப்பில் படர்வதால், ஒளிச் சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விடும்.
 தாக்கும் பயிர்கள்: இந்த மாவுப் பூச்சியானது பருத்தியை மட்டுமன்றி பப்பாளி, செம்பருத்தி, கத்தரி, வெண்டை, மரவள்ளி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களையும், பார்த்தீனியம், துத்தி போன்ற களைகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட  தாவரங்களையும் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றன. 
கட்டுப்படுத்தும் முறை:
வயலில் காணப்படும் களைச் செடிகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பப்பாளி மாவுப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் வெளியிட வேண்டும். 
கிரிப்டோலேமஸ் பொறி வண்டின் புழுக்கள் மாவுப்பூச்சியின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் உண்கின்றன. இந்த இரை விழுங்கியைப் பயன்படுத்தி மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பெண்ணெய் 2 சதவீதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதவீதம் அல்லது மீன் எண்ணெய் சோப் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மாவுப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டினால், ஏக்கருக்கு டைமீத்தோயேட் 30 ஈசி 400 மில்லி அல்லது பிரபினோபாஸ் 50 ஈசி 500 மில்லி அல்லது தயோடிகார்ப் 250 கிராம் என்ற அளவிலும் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 
மாவுப்பூச்சிகளின் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திட தாவர மருந்துகள் மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com