மானாவாரி நிலங்களில்: சாகுபடி மேலாண்மைத் தொழில்நுட்பங்கள்

பருவமழையை நம்பியே பயிர் சாகுபடி செய்ய வேண்டிய இருப்பதால்,   மானாவாரி சாகுபடி விவசாயிகளுக்கு  ஒரு சவாலாகவே உள்ளது.
 மானாவாரி நிலங்களில்: சாகுபடி மேலாண்மைத் தொழில்நுட்பங்கள்

நாமக்கல்:  பருவமழையை நம்பியே பயிர் சாகுபடி செய்ய வேண்டிய இருப்பதால்,   மானாவாரி சாகுபடி விவசாயிகளுக்கு  ஒரு சவாலாகவே உள்ளது.
தமிழகத்தில் உள்ள சாகுபடிப் பரப்பில் 42 சதவீத நிலம் மழையை  எதிர்பார்த்தே உள்ளது.  தமிழகத்தின் ஆண்டு சராசரி  மழையளவு 931 மி.மீ.  தானியப் பயிர்கள், சிறுதானியப் பயிர்கள்,  பயறு வகைப் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள்,  மானாவாரி நிலத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. 
மேலும்,   மண்வளம் காப்பது,  மண் ஈரம் காப்பது,  நவீன தொழில்நுட்பங்களைக் கையாளாமல் இருப்பது போன்ற காரணங்களினால் மானாவாரி நிலங்களில் அதிக விளைச்சல்  எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது.  பெரும்பாலான மானாவாரி நிலங்கள்,  வெப்ப மாறுதலுக்குள்பட்டு,  பருவமழை பொழிவு,  வறட்சி ஆகிய இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேரிடுகிறது.  
நவீன தொழில்நுட்பங்களை மானாவாரி நிலத்தில் கடைப்பிடிப்பதன் மூலம்  விளைச்சலை அதிகப்படுத்தலாம். 
 மானாவாரி பகுதிகளில் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் தேக்கி வைத்து சாகுபடிக்கு உபயோகப்படுத்த வேண்டும்.   மானாவாரி தொழில்நுட்பங்களான மண்ணில் ஈரம் காத்தல்,  ஒருங்கிணைந்த உரம் மற்றும் களை நிர்வாகம் போன்றவற்றினைக் கடைப்பிடிப்பது பலன் தரும்.
மானாவாரி  சாகுபடியில் ஏற்படும் இடர்ப்பாடுகள்
மானாவாரி  நிலங்களில் சரியான பருவமழையையும், மண்ணின் ஈரத்தையும் அறிந்தே பயிர் சாகுபடி முறைகள் கையாளப்படுகின்றன.  மானாவாரியில் அதிக அளவில் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.  முக்கியமாக  நீர் ஆவியாதல்,  பின்தங்கும் பருவ மழை,  அதிக காலம் வறட்சி நீடித்தல்,  பருவ மழையால் பயிர்ச் சேதம் ஏற்படுதல், நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றாமை,  மழைநீர் சேமிப்பு, வறட்சி மேலாண்மை, பண்ணை இயந்திரங்களின் குறைந்த பயன்பாடு மாற்றுப் பயிர் சாகுபடியற்ற வேளாண்மை போன்றவற்றால் சாகுபடியில் மகசூல் பாதியளவு மட்டுமே மானாவாரியில் பெறப்படுகிறது.  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால்,  மழைநீரினை நம்பியே சாகுபடி செய்யப்படுகிறது.   ஈரோடு,  நாமக்கல்,  வேலூர், திருவண்ணாமலை,  கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை,  திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மானாவாரி சாகுபடி பயிர்களே பெரிதும் மேற்கொள்ளப்படுகிறது.
மண், ஈரப்பதம் காக்கும் தொழில்நுட்பங்கள்
 பெய்யும் மழைநீரை உரிய முறையில் சேமிப்பு செய்தால், வறட்சிக் காலங்களில் பாசனம் செய்யவும்,  அடிமண் ஈரம் காத்து பயிர்களுக்குப் பயன்படுத்தவும் உதவுகிறது.   அடிமண் ஈரம் காக்க,  கோடை உழவு,  உளிக்கலப்பை உபயோகித்தல்,  சமமட்ட வரப்பு பயிர்ப் பராமரிப்பு,  ஆழ்சால் அகலப் பாத்தி,  சமதள வரப்பு,  நிலப் போர்வை அமைத்தல்,  கழிவுநீர்க் குட்டைகள் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்றவை சிறந்த  உழவியல் தொழில்நுட்பங்கள் ஆகும்.   சம மட்ட வரப்பு ஏற்படுத்தி மழைநீரினை வேளாண் பணிக்கு உபயோகப்படுத்த 130 செ.மீ. அடிமட்ட அகலமும், 30 செ.மீ.  மேல்மட்ட அகலமும், 40 செ.மீ. உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும்.  இதனால் மழைநீரானது சிறுவடிகால் கொண்டு அடித்துச் செல்வது தடுக்கப்பட்டு நிலம் சமமானதாக மாறும்.
குழிப் படுக்கைகள் அமைத்தல்
குறிப்பிட்ட இடைவெளியில்  சிறிய குழிகள் அமைத்து, மழை நீரினைச் சேமிக்கலாம்.  குழிகளை அமைத்து விதைப்பையும், ஒரே நேரத்தில் செய்யும் டிராக்டருடன் இணைக்கும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.  இம் முறையில், 10-இலிருந்து 50 சதவீதம் வரை ஈரம் அதிகரிக்கிறது.  7-இலிருந்து 8 ஏக்கர் வரை விதைப்பும், நிலச்சரிவு 2 சதவீதத்துக்கு மேலுள்ள இடங்களில் இம் முறையானது பெரிதும் பயன்படுகிறது.
கசிவு நீர்க்குட்டைகள்
ஓடைகளில் அடித்து வரும் நீர் வீணாகாமல்  இருக்க ஓடைகள் முடியும் இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.   இதனால் ஆழம் குறைந்த கிணறுகளில், நீரூற்றுகளில் தண்ணீர் கசிந்து சென்று ஊற்று அதிகரிக்க வழி செய்கிறது.  மழையளவு அதிகமாக உள்ள இடங்களில் இக் குட்டைகளைப் பயன்படுத்தலாம். 
நிலப்போர்வை அமைத்தல்
மண்ணில் உள்ள ஈரம் ஆவியாவதனைத் தடுக்க, பாலிதீன் விரிப்புக் கட்டைகள்,  காய்ந்த இலைச் சருகுகள், தென்னை நார்க் கழிவுகள் போன்றவற்றினால் மூடி மண் ஈரத்தைப் பாதுகாக்கலாம்.  தென்னை நார்க் கழிவு தனது எடையைப் போல்,  5 மடங்கு நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளதால், மழைக் காலங்களில் நீரினை ஈர்த்து மிகச் சிறந்த நிலப் போர்வையாகப் பயன்படுத்த முடியும்.  எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டு நிலப்போர்வை அமைக்கலாம்.
மழைநீருக்கு ஏற்ற பயிரினைத் தேர்வு செய்தல்
மழையளவு 400 செ.மீ. வரை பெய்யும் பகுதிகளில் சோளம், கம்பு, கேழ்வரகு,  எள் மற்றும் சூரியகாந்தி போன்ற பயிர்களையும், 450 மி.மீ. பெய்யும் இடங்களில் நிலக் கடலையும், 600  மி.மீ. மழை பெய்யும் பகுதிகளில் பருத்தியையும் சாகுபடி செய்யலாம்.  கரிசல் நிலங்களில் பருத்தி, சூரியகாந்தி,  சோயா, மொச்சையையும்,  செம்மண் நிலங்களில் நிலக்கடலை, சோளம்,  எள், கம்பு போன்றவற்றையும், களர் மற்றும் உலர் நிலங்களில் கேழ்வரகு, மிளகாய் பயிர்களைப் பயிர் செய்யலாம்.
ஊடு பயிர் சாகுபடி
மானாவாரியில் முக்கியப் பயிருடன் ஊடுபயிர் மற்றும் கலப்புப் பயிர் சாகுபடி செய்வதால்,  கூடுதல் விளைச்சலும்,  வருமானமும் கிடைக்கிறது. மேலும், பூச்சிகளின் தாக்குதல் குறைந்தும், முக்கியப் பயிரின் விளைச்சல் குறைந்தாலும் ஏற்படும் இழப்பினைக் குறைக்க ஊடு பயிர் மூலம் ஓரளவு ஈடுகட்ட முடியும்.  மானாவாரி நிலங்களில் ஊடுபயிராக நிலக் கடலையுடன்,  சோளம்,  துவரை,  சூரியகாந்தி, பருத்தி, பயறு வகைகள், கொத்தமல்லி போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.
பலன் தரும் மரங்களை வளர்த்தல்
புளி,  நெல்லி, சீத்தா, இலந்தை,  விளா,  நாவல், கொடுக்காப்புளி போன்ற பழ வகைகள் நீர் குறைந்த நிலங்களில் மானாவாரியாக பயிர் செய்வதால்,  நல்ல வருமானம் கிடைக்கும்.  தமிழ்நாட்டில் தகுந்த தட்பவெப்பம், மழையளவும் நிலவுவதால்,  மரப்பயிர்களைச் சாகுபடி செய்து பயன் பெறலாம்.  மானாவாரியில் மேற்கண்ட மேலாண்மைத் தொழில்நுட்பங்களைக் கையாண்டு, அதிக விளைச்சலையும், வருமானத்தையும் விவசாயிகள் பெறலாம் என நாமக்கல் பி.ஜி.பி. வேளாண் கல்லூரி முதல்வர் என்.ஓ.கோபால், உதவிப் பேராசிரியர்கள் ப.சவிதா,  ப.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com