தோட்டக்கலைப் பயிர்களைக் காக்கும் வறட்சி மேலாண்மை உத்திகள்

தோட்டக்கலைப் பயிர்களைக் காக்க  பின்வரும்  வறட்சி மேலாண்மை உத்திகளை விவசாயிகள் பயன்படுத்தினால் 10 சதவீதம் வரை மகசூல்
தோட்டக்கலைப் பயிர்களைக் காக்கும் வறட்சி மேலாண்மை உத்திகள்


மதுரை:  தோட்டக்கலைப் பயிர்களைக் காக்க  பின்வரும்  வறட்சி மேலாண்மை உத்திகளை விவசாயிகள் பயன்படுத்தினால் 10 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
 பெருகி வரும் மக்கள்தொகை, தொழிற்சாலைகளின் வளர்ச்சி, நகரமயமாதல் ஆகியன தனி நபருக்கான தண்ணீர் கிடைக்கும் அளவைக் குறைத்துவிட்டன.   பயிர்களைப் பொருத்தவரை வறட்சி என்பது மழையில்லாத குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கும் சொல். மண்ணின் ஈரப்பதம், அதாவது வேரின் நீர் கொள்ளளவைவிட மண் நீராவிப் போக்கின் அளவு அதிகரிக்கும் போது நீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதையே  வறட்சி பாதிப்பு என்கிறோம்.
  பருவமழை இல்லாதது, நிலத்தடிநீர் குறைவு போன்ற காரணங்களால் பாசன வசதி குறைந்து, சாகுபடி செய்யப்படும் அனைத்து நிலங்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்காத நிலையால் வறட்சி நேரிடுகிறது.
  வறட்சி காலங்களில் குறைந்த பாசன நீர் வசதியைக் கொண்டு காய்கறி, பழ மரங்கள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களில் உரிய வறட்சி மேலாண்மை உத்திகளைப் பின்பற்றும் நிலையில், மகசூல் இழப்பைத் தவிர்ப்பதோடு,  சராசரியைக் காட்டிலும் கூடுதலாக மகசூல் ஈட்ட முடியும் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.  இதுகுறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கும் ஆலோசனைகள்:
 வறட்சி மேலாண்மை: சாகுபடிக்கான நிலம் தயாரிப்பில் கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் இட்டு, மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும்.  விதைகளை ஒரு சதவீதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது ஒரு சதவீதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் அல்லது 0.5 சதவீதம் சோடியம் குளோரைடு அல்லது 0.5  சதவீதம் மெக்னீசியம் சல்பேட் கொண்டு கடினப்படுத்துவதன் மூலம் விதைகள் நீர் பற்றாக்குறை காலங்களில் வறண்ட சூழ்நிலைக்கு ஏற்ப தனது செயல்பாட்டை நிலை நிறுத்திக் கொள்ளும்.  வறட்சிக் காலங்களில் பயிர் இடைவெளிகளில் கரும்பு மற்றும் சோளத்தின் சோகையை நிலப்போர்வையாக பயன்படுத்துவதன் மூலம் நிலத்தின் ஈரப்பதத்தை நிலை நிறுத்தலாம்.
பூ, பிஞ்சுகள் உதிர்வைத் தடுக்க...: பயிரின் வளர்ச்சிக் காலங்களில் 1,000 பிபிஎம்- சைகோசல் என்ற வளர்ச்சி தடுப்பானை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி  அளவில் தெளித்து, வளர்ச்சியைக் குறைத்து,  நீராவிப் போக்கை கட்டுப்படுத்தலாம். மேலும், பூ, பிஞ்சுகள் உதிர்வதைத்  தவிர்க்க பிளானோபிக்ஸ் என்ற  வளர்ச்சி ஊக்கியை 4.5 லிட்டர் தண்ணீரில் 4 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.  பிபிஎப்எம்-  என்ற திரவ நுண்ணுயிர் உரத்தை அனைத்து பயிர்களுக்கும், மரங்கள் மற்றும் பூச் செடிகளுக்கு காலை அல்லது மாலை நேரங்களில் ஒரு சதவீதம்  முதல் 2 சதவீதம் தண்ணீரில் கலந்து (10 லிட்டர் நீரில் 100 முதல் 200 மிலி) இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.
 மகசூலை அதிகப்படுத்தும்...: பயிர்களின் முக்கிய வளர்ச்சிக் காலங்கள், பூ மற்றும் காய் பிடிக்கும் தருணம் அல்லது 30 முதல் 45 நாள்களுக்கு ஒரு முறை இதைப் பயன்படுத்தலாம்.  இதனால் வறட்சி தாங்கும் திறன்  அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் விதை முளைப்புத் திறன் அதிகரிக்கிறது. நாற்றுக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. பூக்கும் காலம் மற்றும் காய்களின் அறுவடை காலம் தாமதம் ஆவதைக் குறைக்கிறது. பழங்கள், காய்கள் மற்றும் விதைகளின் நிறம் மற்றும் தரம் அதிகரிக்கிறது. மகசூல் 10 சதவீதம் அதிகரிக்கும். 
   நடமாடும் நீர் தூதுவான் கொண்டு மாலை நேரங்களில் தெளித்தும் பயிர்களை வறட்சியிலிருந்து காக்கலாம்.  தென்னை நார் கழிவு, தென்னை ஓலை, உரி மட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி நீர்வளத்தை பாதுகாக்கும்  வழிகளையும் மேற்கொள்ளலாம்.  தென்னை நார்க் கழிவை, 10 முதல் 15 செமீ  உயரம் வரை வட்டப் பாத்திகளில் பரப்பி சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர்ப் பாய்ச்ச வேண்டும். 
இதனால், மண்ணின் மேற்பரப்பில் நீர் ஆவியாதல் குறைந்து மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும்.   தென்னையின் வட்டப் பாத்தியை சுற்றிலும், 10 முதல் 15 காய்ந்த தென்னை ஓலைகளை வெட்டி துண்டுகளாக்கி பரப்பி வைப்பதால் வேர்ப் பகுதியில் நீரைச் சேமிப்பதோடு வட்டப் பாத்தியில் களைகளும் முளைப்பதில்லை தேங்காய் உரிமட்டைகளை நார் பகுதி கீழ் நோக்கியவாறும், மேல் நோக்கியவாறும் இரண்டு அடுக்குகளாக தென்னையின் அடிப்பகுதியிலிருந்து, 2 மீட்டர் ஆர வட்டத்தில் புதைத்து வேர் பகுதியில் நீரை சேமித்து வறட்சி மேலாண்மை முறைகள் கடைப்பிடிக்கலாம்.

வறட்சியைத் தாங்கி ஈரப்பதத்தைக் காக்கும் வகையில் மிளகாய் பயிரில் அமைக்கப்பட்டுள்ள நிலப் போர்வை அமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com