விவசாயிகளுக்கு வேளாண்மை பல்கலை. தகவல்

சின்ன வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு வேளாண்மை பல்கலை. தகவல்


கோவை: சின்ன வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாட்டின் மொத்த சின்ன வெங்காயத்தின் உற்பத்தி, நுகர்வில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கெனவே குறைந்து வரும் பெரிய வெங்காய சாகுபடி பரப்பிலும் தற்போது சின்ன வெங்காயம் பெருமளவில் பயிரிடப்படுகிறது. மழை குறைந்ததன் காரணமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி, வழக்கத்தை விட பாதியாகக் குறைந்துள்ளது. தற்போது பல்லடம் பகுதியில் இருந்து மட்டுமே சந்தைக்கு வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கோ (ஓ.என்.) 5 என்ற ரகத்தையே விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர். அதிக மகசூல், இளஞ்சிவப்பு நிறம், பெரிய அளவு ஆகியவற்றால் இந்த ரக சின்ன வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. உள்நாட்டுச் சந்தையிலும், ஏற்றுமதி சந்தைகளிலும் அதிகம் விரும்பப்படும் ரகமாக இது உள்ளது. ஆனால், அண்மைக் காலங்களில் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.
தற்போது பெரம்பலூர் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயமானது விதை நோக்கத்துக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும்,  சந்தைக்கு மிகக் குறைவான வரத்தாலும் சின்ன வெங்காயத்தின் விலை தற்போது உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சின்ன வெங்காயத்தின் உற்பத்தி சுமார் 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டிருப்பதால், தமிழக சந்தைகளுக்கு கர்நாடக வெங்காயத்தின் வரத்து குறைவாகவே இருக்கும். அதேநேரம் ஜூன் மாத இறுதியில் மைசூரு, சாம்ராஜ்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காயம் தமிழக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.  இந்த சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை தொடர்பான சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வுகளின் அடிப்படையில் ஜூன் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.45 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக வெங்காயத்தின் வரத்து, எதிர்கால ஏற்றுமதித் தேவைகளைப் பொருத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, இந்த ஆலோசனையின் அடிப்படையில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை மேற்கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை கோவை வேளாண் பல்கலை.யில் உள்ள உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறைத் தலைவரையோ நேரிலோ அல்லது 0422 - 2431405, 6611374 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com