செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

Published: 06th June 2019 12:19 AM

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டத்தில் நிகழ் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஏடீடி 5 உளுந்து பயிரில் மஞ்சள் நோய் பாதிப்பு ஆங்காங்கே காணப்பட்டதால் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயானது வெள்ளை ஈயால் பரப்பப்படும் ஒரு வகை வைரஸ் நோய். தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக உளுந்து பயிரில் வெள்ளை ஈக்களின்  பெருக்கம் அதிகரித்து மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதல் காணப்படுகிறது.இதைத்தடுக்க, சரியான தருணத்தில் உளுந்து விதைகளை விதைத்து, சரியான விதை அளவான ஹெக்டேருக்கு 20 கிலோ மற்றும் பயிர் இடைவெளி 30 செ.மீ. ஷ் 15 செ.மீ. அளவில் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.  ஆரம்ப நிலையிலேயே நோய் தாக்குதல் காணப்படும் ஓரிரு செடிகளை வேரோடு பிடுங்கி அழிக்க வேண்டும். 
இளஞ்செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலைத் தவிர்க்க தயோமித்தாக்ஸன் அல்லது இமிடாகுளோபிரிட் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். வரப்புப் பயிராக மக்காச்சோளம் பயிரிடுவதன் மூலம் வெள்ளை ஈக்களை  இயற்கையிலேயே அழிக்கும் என்காசியா மற்றும் எரிட்மோசீரஸ் ஒட்டுண்ணிகளைப் பெருக்கமடையச் செய்ய முடியும். 
மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டைப் பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற வீதம் கட்ட வேண்டும். தாவரப் பூச்சிக் கொல்லியான 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு அல்லது ஒரு சதவீதம் அசாடிராக்டின் தெளிக்க வேண்டும்.
உளுந்து செடி பூப்பதை ஊக்குவிக்கவும், பூத்த பூக்கள் திரட்சியான காய்களைப் பெறவும் ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி கிராம் சாலிசிலிக் அமிலம் மற்றும் 40 மில்லி கிராம் நாப்தாக்சி அசிட்டிக் அமிலம் கொண்டு 15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும். இலைவழித் தெளிப்பு முறையில் 2 சதவீதம் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும்.  வறட்சிக் காலத்தில் வறட்சியைத் தாங்குவதற்காக  இடைபருவ மேலாண்மை முறையாக 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பி.பி.எம். போரான் கலந்து தெளிக்க வேண்டும்.
வண்டல் மண் பகுதியில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிரின் பன்முகப் பூக்கும் நிலையை ஊக்குவிக்க விதைத்த 40 முதல் 45 நாட்களில் பரிந்துரைக்கப்பட்ட மேலுரத்துடன் கூடுதலாக ஹெக்டேருக்கு 25 முதல் 30 கிலோ யூரியா உரத்தை இட வேண்டும்.
வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிக்கும்போது, ஊடுருவி பாயக்கூடிய பூச்சி மருந்துகளில் ஹெக்டேருக்கு டைமெத்தவேட் 30 ஈசி 500 மில்லி அல்லது மித்தைல் டெமட்டான் 25 ஈசி 500 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம். 
எனவே, உளுந்து சாகுபடி செய்துள்ள இப்பகுதி விவசாயிகள் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த இந்த மேலாண்மை முறைகளைக் கையாண்டு அதிக மகசூல் பெறலாம் என வேளாண் துறையின் தஞ்சாவூர் மாவட்ட இணை இயக்குநர் க. நெடுஞ்செழியன்  தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

விளைச்சலை பெருக்க விதைகளின் தரமறிந்து விதைப்பது அவசியம்
சிவப்பு கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் உதவி இயக்குநர் தகவல்
நெற்பயிரில் எளியமுறை பூச்சி மேலாண்மை
நுண்சத்து குறைபாட்டால் வரும்  மகசூல் இழப்பை தடுக்கும் முறைகள்...
தோட்டம் அமைக்கலாம் வாங்க...