பெல்லாரி வெங்காயத்தில் நவீன சாகுபடி தொழில்நுட்பம்: ஏக்கருக்கு 10 டன்கள் மகசூல் பெறலாம்

பெல்லாரி வெங்காயத்தில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடவு செய்வதன்
பெல்லாரி வெங்காயத்தில் நவீன சாகுபடி தொழில்நுட்பம்: ஏக்கருக்கு 10 டன்கள் மகசூல் பெறலாம்



நாமக்கல்: பெல்லாரி வெங்காயத்தில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடவு செய்வதன் மூலம் ஏக்கருக்கு 8 முதல் 10 டன்கள் வரை மகசூல் பெறலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ஷர்மிளா பாரதி, தலைவர் அகிலா ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் தெரிவித்தது: இந்தியாவில் 12.03 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு, உலக அளவில் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது. மொத்த உற்பத்தியான 1.94 கோடி மெட்ரிக் டன்களில் 15 முதல் 20 சதவீதம் ஜூன் - ஆகஸ்ட் மாதங்களிலும், 20 - 25 சதவீதம் செப்டம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 60 - 65 சதவீதம் ஜனவரி - ஏப்ரல் மாதங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. 
தற்போது பெல்லாரி வெங்காயமானது நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் இதர மாவட்டங்களில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பெல்லாரி வெங்காயத்தின் வரத்து ஜூலை தொடங்கி டிசம்பர் வரை குறைவாக இருக்கும்.
இந்த நேரத்தில், பெல்லாரி வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படும். நாமக்கல் மாவட்டத்தில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் வட்டாரங்களான எருமப்பட்டி, வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஆகிய இடங்களில், விவசாயிகள், பெல்லாரி வெங்காயத்தை சாகுபடி செய்து வருகின்றனர்.
ரகங்கள்: வணிக ரீதியாக தற்போது, அக்ரி பவுண்ட் கருஞ்
சிவப்பு, பூசா சிவப்பு, பூசா மாதவி, அர்கா நிகேதன், அர்கா கீர்த்திமண், அர்கா பீதாம்பர், டார்க் ரெட், பீமா சூப்பர் மற்றும் அர்கா பீம் போன்ற ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு, பிரபலமடைந்து வருகின்றன.
விதைப்பு காலம், விதையளவு:
பொதுவாக, பெல்லாரி வெங்காயமானது தமிழகத்தில் மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும், ஜூலை - ஆகஸ்ட் மாதங்களிலும் விதைக்கப்படுகிறது. ஓர் ஏக்கருக்கு, 3.2 முதல் 4 கிலோ போதுமானது.
நாற்றங்கால் தயாரிப்பு: மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் பெல்லாரி வெங்காய விதைகளை விதைப்பு செய்ய வேண்டும். மேட்டுப் பாத்திகளை 15 முதல் 20 செ.மீ. உயரத்திலும், 70 முதல் 76 செ.மீ. அகலத்திலும், நீளத்தை 3 முதல் 5 மீட்டர் வரையிலும் அமைக்க வேண்டும்.
இவ்வாறு பாத்திகளை அமைத்தபின் நன்கு மக்கிய தொழு உரத்தை இரண்டு செ.மீ., உயரத்துக்கு தூவிவிட வேண்டும். அல்லது 200 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் ஒரு கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி என்ற பூஞ்சாணக்கொல்லி மருந்து கலந்து நாற்றங்காலில் இட்டு நன்றாக கலந்து நாற்றங்கால் அமைப்பதால், நாற்றுகள் வீரியமாக வளர்வதுடன், நாற்றழுகல் நோயையும் கட்டுப்படுத்தலாம். 
மேலும், ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற அளவில் விதைப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் கலந்து விதைகளை நிழலில் காய வைக்க வேண்டும்.
நாற்று பறித்து நடவு செய்யும் வரை நாற்றங்காலில் களை இல்லாமல் உடனுக்குடன் களைகளை எடுத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாற்றுகள் வளர்ச்சியைத் துரிதப்படுத்த விதை விதைத்த 15ஆம் நாள், 30ஆம் நாள் 19:19:19 என்ற விகிதத்தில் நீரில் கரையும் உரத்தை, லிட்டருக்கு, இரண்டு கிராம் என்ற அளவில் கலந்து இலை வழியாக தெளிப்பு செய்ய வேண்டும்.
நடவு: 40 நாள் வயதுடைய நாற்றுகளை வரிசைக்கு வரிசை 15 செ.மீ. இடைவெளியிலும், செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும். நடவுக்கு 15 நாள்களுக்கு முன் ஓர் ஏக்கருக்கு தேவையான, ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 200 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து லேசாக நீர் தெளித்து நிழலில் வைத்திருந்து நடும்போது நடவு வயலில் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், அதிக மழையின் போது காய்களில் ஏற்படும் தூரழுகல் நோயில் இருந்து கட்டுப்படுத்தலாம்.
வளர்ச்சியூக்கி மற்றும் நுண்ணூட்ட உரம் தெளிப்பு: வெங்காயம் நட்ட 15 மற்றும் 45-ஆவது நாள் சைட்டோசைம் 0.2 சதவீதம் தெளிப்பது, காய்பெருக்கத்துக்கு உதவும். மகசூலைக் கூட்டுவதற்கும், நுண்ணூட்டச்சத்து பற்றாக்
குறையைத் தவிர்க்கவும் இலைவழியாக துத்தநாக சல்பேட், இரும்பு சல்பேட், தாமிர சல்பேட் மற்றும் போரான் போன்ற நுண்ணூட்ட உரங்களை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று கிராம் என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து நட்ட 30 மற்றும் 40-ஆம் நாளில் தெளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் பதப்படுத்துதல்: அறுவடைக்கு 10 - 15 நாள்களுக்கு முன் நீர்ப் பாசனத்தை நிறுத்துவதால் காய்கள் நன்றாக இறுக்கமடையும். அறுவடைக்கு பின் காய்களை வரிசையாக தாள்களால் காய்ப் பகுதி மறையும் வகையில் வைத்து வயலில் உலர்த்த வேண்டும். மகசூல் ஏக்கருக்கு 8 முதல் 10 டன்கள் வரை கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com