வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

சொர்ணவாரி பருவ நெல் சாகுபடி: உழவுப் பணிகள் மும்முரம்

Published: 28th February 2019 12:49 AM


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கிராமப்பகுதிகளில் சொர்ணவாரி பருவ நெல் நடவு செய்வதற்கான உழவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 
மாவட்டத்தில் மொத்தம் 1.50 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. இவற்றில் 1.20 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பம்ப்-செட் மூலம் இறைக்கப்படும் நீரைக் கொண்டு நெல், எண்ணெய் வித்துப் பயிர்களும், கரும்பு, மா, தென்னை, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 
நவரை, சம்பா, சொர்ணவாரி ஆகிய 3 பருவங்களிலும் நெல் சாகுபடி அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் பயிரைப் பராமரித்து உரமிட்டு, களை எடுத்தால் போதுமானது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது நீர் பாய்ச்சினாலே பயிர்கள் நன்கு வளர்ந்து விடும். விவசாயிகள் எதிர்பார்க்கும் மகசூலும், அதற்கான விலையும் கிடைத்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் நெல் பயிரிடும் நிலத்தின் பரப்பளவு அதிகரித்துள்ளது.  
தற்போது கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் சொர்ணவாரி பருவத்துக்கான நெல் நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலக்காஞ்சேரி, சிறுவனூர்கண்டிகை, புல்லரம்பாக்கம், கொசவம்பாளையம், காந்திநகர், புதூர், மோகூர், சதுரங்கப்பேட்டை, கன்னிமாபேட்டை, பூண்டி கூட்ரோடு, நெய்வேலிகிராமம், ஒதப்பை, பூண்டி, அரும்பாக்கம் கிராமம், ரெங்காபுரம், சென்றாம்பாளையம், திருப்பாக்கம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 57 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிடுவர் என்று வேளாண்மைத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் தற்போது போதுமான நீர் இல்லாத நிலையில், ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பியே சொர்ணவாரி பருவத்துக்கான நெல் நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நடவுப் பணிகளுக்காக கடந்த 40 நாள்களுக்கு முன்பாகவே நாற்றுகளை விதைத்திருந்தனர். தற்போது, நடவு செய்வதற்குப் போதுமான அளவில் நாற்றுகள் வளர்ந்துள்ளன. 
இதைத் தொடர்ந்து பூண்டி, புல்லரம்பாக்கம், தலக்காஞ்சேரி பகுதியில் முதல் கட்டமாக டிராக்டர் மூலம் உழவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேற்கொள்வதற்கு தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை டிராக்டர்களை வரவழைத்து உழவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஏராளமான கொக்குகள் இரை தேடி வயல்வெளிகளில் குவிந்துள்ளன.
இதுகுறித்து மோகூர் விவசாயி நம்பிராஜன் கூறியது: தற்போதைய சொர்ணவாரி பருவத்தில் ஏரிகளில் போதுமான நீர் ஆதாரம் இல்லை. இதனால் ஆழ்துளைக் கிணற்று நீரை நம்பியே நான் 15 ஏக்கரில் நெல் பயிரிட்டு வருகிறேன். இப்பகுதியில் விவசாயிகள் அனைவரும் ஒரே நேரத்தில் நெல் நடவு செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் உழவு செய்யும் டிராக்டர் வாடகை ஒரு ஏக்கருக்கு கடந்த ஆண்டு ரூ.900-ஆக இருந்தது, தற்போது ரூ.1,100 வரை அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் நெல் பயிரை நடவு செய்தே ஆக வேண்டும். அதனால் செலவு அதிகரித்தபோதிலும் உழவுப் பணிகளைச் செய்து வருகிறோம் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நாள்தோறும் வருமானம் கொடுக்கும் எலுமிச்சை
தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க நேரடி நெல் விதைப்பே சிறந்தது

 வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கலாம்!
 

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!
ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது