தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க நேரடி நெல் விதைப்பே சிறந்தது

காவிரி டெல்டா விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதே சிறந்தது என மூத்த வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க நேரடி நெல் விதைப்பே சிறந்தது


தஞ்சாவூர்:  காவிரி டெல்டா விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதே சிறந்தது என மூத்த வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
காவிரி டெல்டா பகுதியில் பயிர் சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. பயிர் சாகுபடி காலமான ஜனவரி கடைசி வரை நீர் திறந்துவிடப்பட வேண்டும். சம்பா பரப்பு முழுவதும் நாற்றுவிட்டு நடவு செய்தால்,  வடகிழக்குப் பருவத்தில் கிடைக்கும் இயல்பான மழையை நன்கு பயன்படுத்தினாலும், 230 டிஎம்சி அளவுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் தேவைப்படும்.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சாகுபடி காலத்தில் 167.25 டிஎம்சி நீர் கர்நாடக மாநிலத்திலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டும். இதுவரை சுமார் 85 டிஎம்சி தண்ணீர்தான் பெறப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்குப் பருவ காலம் முடியும் தருணத்தில் உள்ளதாலும், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் இயல்பான மழையளவை தாண்டிய நிலையில், இன்னும் 10 நாள்களுக்கு அப்பகுதியில் மிகக் குறைவான மழை பெய்யும் என வானிலை அறிக்கை மூலம் அறிய முடிகிறது. இந்நிலையில், இனிவரும் மாதங்களில் கடந்த ஆண்டைப் போல நீர்வரத்து இருந்தாலும் சுமார் 85 டிஎம்சி நீர் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, நடவு முறையை மட்டும் மேற்கொண்டால் குறைந்தது 50 டிஎம்சி நீர் பற்றாக்குறை ஏற்படும். இக்குறையை தீர்க்க குறைந்தது 3 லட்சம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு அவசியமாகிறது.
நேரடி நெல் விதைப்பு முறை: நேரடி நெல் விதைப்பு முறையில், நாற்றங்கால் தயாரிக்கவும் நடவு வயலை தயார்படுத்தவும் குறைந்தளவு நீரே தேவைப்படும். நேரடி நெல் விதைப்பு முறை சாகுபடியில் சுமார் 40 சதவீதம் நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதால், கிடைக்கவுள்ள 170 டிஎம்சி நீரை கொண்டு நிகழாண்டில் ஒரு போக சாகுபடியைக் குறைவின்றி மேற்கொள்ள முடியும்.
நேரடி நெல் விதைப்பு முறையால் நீர்த் தேவை குறைவதுடன், அதிக மகசூல் கிடைக்கிறது. நெல் பயிரில் சிம்புகள் உருவாகும். அடுக்கு கணுக்கள் மண் பகுதியில் மேலாக இருப்பதால், உடனடியாக அதிக சிம்புகள் உருவாகி அத்தனை சிம்புகளிலும் ஒரே மாதிரியான வாளிப்பான கதிர்கள் உருவாகி மகசூல் அதிகரிக்கிறது. 
மேலும், நடவு முறை சாகுபடியைவிட, பயிரின் வயது சுமார் 10 நாள்கள் குறைகிறது. நடவு செய்தால் அடுக்கு கணுக்கள் மண்ணுக்குள் சென்று விடுவதால், கிளை அடிக்கும் கணுக்கள் செயலிழந்து மேல்மட்ட கணுக்களில் கதிர் வரும். அதில் மகசூல் குறைவாக இருக்கும். 
தவிர, ஒவ்வொரு வாய்க்காலின் கடைமடைப் பகுதியில் ஆற்று நீர் சென்றடைய கால தாமதமாவதால் சாகுபடியும் தாமதமாகி, வடகிழக்குப் பருவமழை காலத்தில் இளம்பயிர் சேதமடைகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கிடைக்கும் பருவ மழையைக் கொண்டு நேரடி நெல் விதைப்பு செய்வதால், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் வளர்ச்சி நிலை அடைந்து, மழையைத் தாங்கும் தன்மை பெற்று, இழப்புக் குறைகிறது.
இதை உணர்ந்த நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட கடைமடை பகுதி விவசாயிகள் அனைவரும் நேரடி நெல் விதைப்பை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், தற்போது கடைப்பிடிக்கப்படும் 1.75 லட்சம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு பரப்பு என்பது குறைவானதாகும். பாசன நீர்த்  தேவையைக் குறைப்பதற்கு நேரடி நெல் விதைப்பைக் குறைந்தது 3 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு  மேற்கொள்வது அவசியம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெண்ணாறு பாசனப் பகுதியிலும், கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதியில் மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் அதிக பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயிகள் தயங்குவதற்கு முக்கியக் காரணம் களை பிரச்னைதான். தற்போது காவிரி படுகைப் பகுதி முழுவதும் கிடைத்துள்ள மழையைப் பயன்படுத்தி வயலை உழுது களைகள் அழிக்கப்பட வேண்டும். எனவே,  விவசாயிகள் அனைவரும் இம்மழையைப் பயன்படுத்தி உழவு மேற்கொள்ள  வேண்டும். தயார் நிலையில் உள்ள வயல்களில் செப்டம்பர் முதல் வாரத்துக்குள் விதைப்பதற்கு வசதியுள்ள விவசாயிகள் நீண்டகால ரகங்களை விதைக்கலாம். மத்திய கால ரகத்தை செப்டம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கி மாத இறுதி வரை விதைக்கலாம்.
வயல் புழுதி நிலையில் இல்லாமல், சேறு நிலையில் உள்ள வயல்களிலும் முளை கட்டிய விதைகளை விதைத்து  பயன் பெறலாம். நேரடி நெல் விதைப்பதற்கு ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானது.
நேரடி நெல் விதைப்பால் நீர் தேவை குறைகிறது. நடவு செய்ய தொழிலாளர்கள் மற்றும் நடவு இயந்திரம் போன்ற தேவைகள் குறைகின்றன. வடகிழக்குப் பருவமழை சேதம் தவிர்க்கப்படுகிறது. நெல் பயிரின் வயதும், சாகுபடி செலவும் குறைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அதிக மகசூல் கிடைப்பதுடன் நிகர லாபம் கூடுகிறது.
அன்றாடம் வானிலை அறிக்கையை கவனித்து அதன்படி, விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 
எனவே,  விவசாயிகள் அதிக பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என மூத்த வேளாண் வல்லுநர்கள் பி. வெங்கடேசன், பி. கலைவாணன், வ. பழனியப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com