ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது

தமிழக விவசாயிகளுக்காக ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது


கோவை: தமிழக விவசாயிகளுக்காக ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 இதுகுறித்து வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, 2018-19 -ஆம் ஆண்டு இந்தியாவில் தக்காளி 8.14 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2.02 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தக்காளியை அதிகமாக உற்பத்தி செய்கின்றன.
மொத்த தக்காளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 5 சதவீதத்துக்கும் குறைவுதான். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கியமான மாவட்டங்களாகும். தமிழ்நாட்டில் அனைத்துப் பருவங்களிலும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டாலும் ஆடி பருவத்தில் சாகுபடி செய்வதையே பெரும்பாலான விவசாயிகள் விரும்புகின்றனர். கர்நாடகத்தில் இருந்து தக்காளி வரத்து ஜூலை மாதம் தொடங்கியுள்ளது. இது ஆகஸ்ட் இறுதி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்திரி: தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன் கூட்டிய அறிக்கையின்படி 2018-19 -ஆம் ஆண்டில் இந்தியாவில் கத்திரி 7.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 1.29 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கத்திரி உற்பத்தியில் முக்கியப் பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் அதிக அளவில் கத்திரி பயிரிடப்படுகிறது.  
வெண்டை: 2018-19 -ஆம் ஆண்டு இந்தியாவில் வெண்டைக்காய் 5.11 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 62.19 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் மேற்கு வங்கம், குஜராத், பிகார், ஒடிஸா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் வெண்டை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோவை, மதுரை மாவட்டங்களில் அதிக அளவில் வெண்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி, வெண்டைக்காய் விலையை சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது.
இதன் அடிப்படையில், இந்த ஆண்டு அறுவடையின்போது தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ. 18 முதல் ரூ. 20 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் நல்ல தரமான கத்திரிக்காயின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.28 முதல் ரூ.31 வரை இருக்கும் என்றும் வெண்டைக்காயின் விலை ரூ.20 முதல் ரூ.22 வரை இருக்கும் எனவும் அறியப்படுகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தங்களது விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளலாம்.  இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறைத் தலைவரையோ அணுகலாம். தொடர்புக்கு 0422 - 2431405, 6611374.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com