மாலத்தீவு தேர்தல்: அதிபர் யாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மாலத்தீவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்து தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தள்ளுபடி செய்தது
மாலத்தீவு தேர்தல்: அதிபர் யாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மாலத்தீவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்து தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தேர்தலில் அவரது தோல்வி உறுதியாகியுள்ளது. யாமீனின் அரசியல் பயணத்துக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 மாலத்தீவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனும் இரண்டாவது முறையாக போட்டியிட்டார்.
 தேர்தலுக்கு முன்னரே தனது அரசியல் எதிரிகளை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைத்ததால், அந்தத் தேர்தலில் அதிபர் யாமீன் எளிதாக வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அதிபர் யாமீனை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க் கட்சிக் கூட்டணி வேட்பாளர் இப்ராஹிம் முகமது சோலீ அந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார்.
 அதிபர் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும், எனவே அந்தத் தேர்தல் முடிவுகளை செல்லாததாக அறிவித்து, மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அதிபர் யாமீன் மனு தாக்கல் செய்தார்.
 இதனை, உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஒரு வாரகாலமாக விசாரித்து வந்தது. இதனிடையே, இந்த வழக்கில் ரகசிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற யாமீன் விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது.
 மேலும், இந்த வழக்கில் அழியும் மையால் தான் தனக்கு தோல்வி ஏற்பட்டது என்றும், முறைகேடு செய்யப்பட்ட வாக்குச் சீட்டுகளால் தான் எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார் என்றும் தனது தரப்பு வாதங்களை யாமீன் உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். எனவே, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்ட இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தை யாமீன் கேட்டுக் கொண்டார்.
 இந்த நிலையில், யாமீன் மனு மீதான விசாரணை ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதை உறுதி செய்யும் வகையில் எந்தவித ஆவணங்களையும் மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை எனவும், புதிதாக தேர்தலை நடத்த அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி யாமீன் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்வதாக ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒரு மனதாக தீர்ப்பளித்தது.
 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாமீனின் அரசியல் பயணத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய அதிபராக இப்ராஹிம் சோலி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com