ஆப்கன்: தேர்தல் வாக்குச் சாவடிகளில் பயங்கர வன்முறை

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் போது நூற்றுக்கணக்கான வாக்குச் சாவடிகளில் வன்முறை ஏற்பட்டது. இதனால், தேர்தல் முடிவுகள் குறித்த நம்பகத்தன்மை
ஆப்கன்: தேர்தல் வாக்குச் சாவடிகளில் பயங்கர வன்முறை

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் போது நூற்றுக்கணக்கான வாக்குச் சாவடிகளில் வன்முறை ஏற்பட்டது. இதனால், தேர்தல் முடிவுகள் குறித்த நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 பல முறை ஒத்திவைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் மாகாண பேரவைகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. ஆனால், அந்தத் தேர்தலை புறக்கணிக்கும்படி பொதுமக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் தலிபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
 ஆனால், பயங்கரவாதிகளின் இந்த கோரிக்கையை நிராகரித்த பொதுமக்கள் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில், காபூலில் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் உள்ள வாக்குச் சாவடிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை நிகழ்த்தினர். இந்த வன்முறை சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனால், வாக்குப் பதிவில் இடையூறு ஏற்பட்டு பல இடங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டன.
 வாக்குப் பதிவு நிறுத்தப்பட்ட மையங்களில் மறுதேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, 20க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 253 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்குப் பதிவு தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக 148 வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலிலும் பல இடங்களில் வன்முறை மூண்டது. தேர்தல் தொடர்பான வன்முறைகளில் இதுவரையில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆப்கன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகம். தேர்தலில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து தேர்தல் முடிவுகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்குமா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போதைய நிலைமையை கருத்தில் கொள்ளும் போது அடுத்தாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 காந்தஹாரில், அமெரிக்க தலைமையிலான நேட்டோ மற்றும் ஆப்கன் படையினரின் கூட்டம் மாகாண ஆளுநர் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 அதில் நேட்டோ படைத் தளபதி ஸ்காட் மில்லர், காந்தஹார் காவல்துறை தலைவர் அப்துல் ரஸீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 அப்போது பாதுகாப்புப் படையினரின் சீருடை அணிந்து அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த தலிபான் பயங்கரவாதி, அவர்களைக் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டதில், அப்துல் ரஸீக், காந்தஹார் மாகாண உளவுத் துறை தலைவர் மற்றும் செய்தியாளர் ஒருவர் உயிரிழந்தனர். நேட்டோ படைப் பிரிவுத் தளபதி ஸ்காட் மில்லர் காயமின்றி உயிர் தப்பினார்.
 அதையடுத்து, அந்த மாகாணப் பேரவைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்தல் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெரும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com