இலங்கை: நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி

இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கை: நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி


இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். இது அந்நாட்டு அதிபர் சிறீசேனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 225 எம்.பி.க்களில் 117 பேர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) ஆகியவை ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தன. மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ரணில் கட்சிக்கு 106 எம்.பி.க்களும், சிறீசேனா - ராஜபட்ச அணிக்கு 95 உறுப்பினர்களும் உள்ளனர். அதிபர் சிறீசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து வெளியேறின. ரணில் பிரதமராக இருந்தபோது துணை பிரதமராக இருந்த சஜ்ஜித் பிரேமதாசா, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதன் மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்றதை அடுத்து, நாடாளுமன்றத்தை வரும் 18-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.
முன்னதாக, இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அப்பதவியில் முன்னாள் அதிபர் ராஜபட்சவை அதிபர் சிறீசேனா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி நியமித்தார். அப்போதிலிருந்து, இலங்கை அரசியலில் நாள்தோறும் அதிரடி திருப்பங்களும், குழப்பங்களும் ஏற்பட்டு வந்தன.
நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக சிறீசேனா அறிவித்தார். எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதித்த இலங்கை உச்சநீதிமன்றம், தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கியது.
ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 122 உறுப்பினர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜபட்ச பிரதமராகச் செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜபட்ச மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டி, ரணில் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் வெற்றி பெற்றுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com