பிரெக்ஸிட் குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர்கள்.
பிரெக்ஸிட் குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர்கள்.

பிரெக்ஸிட் முடிவை பிரிட்டன் தன்னிச்சையாக திரும்பப் பெறலாம்: ஐரோப்பிய நீதிமன்றம்

சக உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாமலேயே, ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் (பிரெக்ஸிட்) முடிவை பிரிட்டன்


சக உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாமலேயே, ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் (பிரெக்ஸிட்) முடிவை பிரிட்டன் திரும்பப் பெறலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதனை, பிரிட்டனில் பிரெக்ஸிட்டுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
பிரெக்ஸிட் தொடர்பாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சில தலைவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து விலகும் முடிவை பிரிட்டன் மாற்றிக் கொள்ள விரும்பினால், அந்த நாட்டின் அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டால் போதுமானது.
அத்தகைய சூழல் ஏற்பட்டால், ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக பிரிட்டன் தொடரும்.
அவ்வாறு தொடர்வதற்கு, பிற உறுப்பு நாடுகளின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
எனினும், ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை பிரதமர் தெரசா மே வெளியிட்டார். அந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியனும் ஒப்புதல் வழங்கியது.
எனினும், அந்த ஒப்பந்தம் பிரிட்டனின் நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்று ஆளும் கட்சியில் ஒரு பிரிவினரே போர்க் கொடி தூக்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, தெரசா மே அமைச்சரவையிலிருந்து இதுவரை 7 அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.
இதற்கிடையே, பிரெக்ஸிட் முடிவை வாபஸ் பெற வேண்டும் எனவும், இதுகுறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு சாரார் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில்தான், ஐரோப்பிய நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com