போராட்டம் எதிரொலி: ஈஃபில் கோபுரத்துக்குச் செல்லத் தடை

பிரான்ஸில் பெட்ரோல், டீசலுக்கு வரிகளை உயர்த்துவதற்கு எதிராக நடைபெற்று வரும் தீவிர போராட்டங்களையொட்டி,
மஞ்சள் அங்கி போராட்டத்தை எதிர்கொள்வதற்காக, காவல்துறையினர் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிடும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர்
மஞ்சள் அங்கி போராட்டத்தை எதிர்கொள்வதற்காக, காவல்துறையினர் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிடும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர்


பிரான்ஸில் பெட்ரோல், டீசலுக்கு வரிகளை உயர்த்துவதற்கு எதிராக நடைபெற்று வரும் தீவிர போராட்டங்களையொட்டி, தலைநகர் பாரீஸில் உள்ள புகழ் பெற்ற ஈஃபில் கோபுரத்துக்குச் செல்ல சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரீஸில் பதற்றம் நிறைந்த 14 இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் தீவிரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, பாரீஸ் நகரிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஈஃபில் கோபுரத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், பாரீஸ் நகரம் முழுவதும் பாதுகாப்புக்கு 8,000 போலீஸார் குவிக்கப்படவுள்ளனர்.
பதற்றம் நிறைந்த பகுதிகளாக 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடுவர்கள், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் போன்ற பொருள்களை சேதப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பதற்றம் நிறைந்த பகுதிகளில் கண்ணாடியால் ஆன பொருள்கள், கட்டுமானம் நடைபெறும் இடங்களிலுள்ள கருவிகள் போன்றவற்றை போலீஸார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் 65,000 போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் அந்த எண்ணிக்கை 89,000-ஆக அதிகரிக்கபடவுள்ளது.
இதுதவிர, நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஃபிரெஞ்சு கால்பந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசல்களுக்கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் பெட்ரோலின் விலை 23 சதவீதம் அதிகரித்து, ஒரு லிட்டர் விலை 1.51 யூரோவாக (சுமார் ரூ.121) ஆகியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எதிர்ப்பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், மஞ்சள் அங்கி போராட்டம் என்றழைக்கப்படுகிறது.
வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வந்த இந்தப் போராட்டம், மூன்றாவது வாரமாக கடந்த 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் மிகவும் தீவிரமடைந்தது. அப்போது தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன.
இதில், 23 பாதுகாப்புப் படையினர் உள்பட 133 பேர் காயமடைந்தனர். 
இந்தப் போராட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், பெட்ரோல், டீசலுக்கான வரி உயர்வு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்தது.
எனினும், இந்த சனிக்கிழமையிலும் (டிச.8) போராட்டம் நடைபெறும் எனவும், அதில் மீண்டும் வன்முறை வெடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதால், அரசு இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com