செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

இலங்கை அரசியல் குழப்பம் 7 நாளில் முடிவுக்கு வரும்

DIN | Published: 06th December 2018 02:41 AM


இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் 7 நாள்களில் முடிவுக்கு வரும் என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா கூறியுள்ளார்.
ராஜபட்ச பிரதமராகச் செயல்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், சிறீசேனா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அப்பதவியில் முன்னாள் அதிபர் ராஜபட்சவை சிறீசேனா கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி நியமித்தார். அப்போதிலிருந்து, இலங்கை அரசியலில் நாள்தோறும் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத சூழலில், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக சிறீசேனா அறிவித்தார். எனினும், அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது என்று அறிவித்த இலங்கை உச்சநீதிமன்றம், தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கி வைத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவும், ராஜபட்சவுக்கும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரி வருகின்றனர். இதனிடையே, ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 122 உறுப்பினர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜபட்ச பிரதமராகச் செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜபட்ச செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், சிறீசேனா தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசியலில் தற்போது நிலவி வரும் குழப்பம் 7 நாள்களுக்கு மேல் நீடிக்காது. நாட்டு நலனைக் கருத்தில் கொண்டே எப்போதும் நான் முடிவெடுத்து வருகிறேன். நல்லாட்சிக்கான கொள்கைகளை ரணில் விக்ரமசிங்க அழித்து வந்ததால், வேறு வழியின்றி பதவிநீக்கம் செய்தேன் என்று சிறீசேனா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

More from the section

இன்ஸ்ட்டாகிராமிலும் வந்தாச்சு வாய்ஸ் மெசேஜ் வசதி
கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட சிக்கல்: அம்பலத்திற்கு வந்த ஐந்து கோடி பேரின் தகவல்கள்  
மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு: நிதியமைச்சர், சிபிஐ வரவேற்பு
பாகிஸ்தான்: சார்க் கூட்டத்தில் இருந்து இந்திய தூதர் வெளிநடப்பு
பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடையாது: அமெரிக்கா திட்டவட்டம்