மகிஷனை வதைத்த மங்கள நாயகி!

திருச்செந்தூரில் இருந்து 12 -ஆவது கிலோமீட்டரில் கன்னியாகுமரி செல்லும் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது  குலசேகரன்பட்டினம்.
மகிஷனை வதைத்த மங்கள நாயகி!

திருச்செந்தூரில் இருந்து 12 -ஆவது கிலோமீட்டரில் கன்னியாகுமரி செல்லும் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது  குலசேகரன்பட்டினம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னால் மன்னன் குலசேகரப் பாண்டியனுக்கு அன்னை முத்தாரம்மனாகக் காட்சி தந்து அருளியதாக வரலாறு. குலசேகர ஆழ்வார் காலத்தில் இருந்து இவ்வூரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலுடன் தொடர்புடையதாக,  அண்ணனும் தங்கையுமாய்  குடிகொண்டு சிறப்பு சேர்த்ததனால், குலசேகர ஆழ்வார்  இவ்வூருக்குத் தன் பெயரையே இட்டு வழங்கியதாகச் சொல்வர். 

மைசூர் தசரா,  "தர்பார் தசரா' எனவும் , குலசேகரப் பட்டினத்து தசரா, "மக்கள் தசரா'  எனவும் அழைக்கப் படுகிறது. வீரகாளி, பத்ரகாளி, கருங்காளி, முப்புடாரி முத்தாரம்மன், உஜ்ஜயினி மாகாளி, மும்முகக்காளி, வண்டி மறித்த காளி  என்னும் 7 காளிகளுடன் முதன்மை பெற்ற சுயம்புவாய் அன்னை முத்தாரம்மனுடன் சேர்ந்து அஷ்டகாளிகள் குடிகொண்ட  ஊர் என்பது சிறப்பாகும்.

கன்னியாகுமரி  மாவட்டத்தில் புகழ்பெற்ற மயிலாடி சிற்பி சுப்பையாஆச்சாரி வீட்டிற்கு  அதிகாலை கனவில் ஓர் ஆணும் பெண்ணும் சர்வாபரணங்களுடன் வந்து, உயர்ந்த மனைப் பலகையில் ஒருசேர தம்பதிகளாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.  ஒரு பாறையில் தங்களைக் கல்லில் வடித்து  குலசையில் இருந்துவரும் பெரியோர்களிடம் கொடுக்கச் சொல்லி மறைந்து போயினர். கனவில் கடவுள் இட்ட கட்டளைப்படி சிற்பி பீடம் முதல் துவங்கி சிலை செய்தார். குலசை அர்ச்சகர் கனவில் முத்தாரம்மன் தோன்றி, மயிலாடி சென்று சிலை பெற்று வந்து நிறுவ  உத்தரவு  இட்டாள். 

ஊரார்  மயிலாடி சென்று முழுச் சிலையை எடுத்து வந்து சுயம்பு அம்மனுக்கு பின்புறம் வைத்தவுடன் அளவெடுத்து செய்த சிலைபோல ஒரு செவ்வாய்க்கிழமையில் அழகாக அமர்ந்தது.  முத்தாரம்மன் அருள்மிகு ஞானமூர்த்தியாருடன் அம்மை அப்பனாக காட்சி தர, குடமுழுக்கும் நடந்தேறியது. கருவறையில் அம்பாளுக்காக இறைவன் ஞானமூர்த்தீசராக கையில் செங்கோலும் இடக்கையில் விபூதி மடலுடன்  2 கரங்களுடனும் காட்சி தருகிறார். முத்தாரம்மன்  நான்கு கரங்களுடன் உலகை உருவாக்கி, காத்து ரட்சித்து மறைத்து, அருளும் அனைத்துப் பணிகளையும்  இங்கு மேற்கொண்டிருக்கிறாள். ஞானமூர்த்தீஸ்வரரின் பணிகளையும் முத்தாரம்மனே செய்வதால், இங்கு அம்பாளும் ஞானமூர்த்தீஸ்வரரும் பரிவர்த்தனை யோக நிலையில் உள்ளனர்.

இக்கோயிலுக்கு வார செவ்வாய்க்கிழமைகள் முக்கியமான நாள்களாகும். ஒவ்வொரு தமிழ்மாதம் கடைசிச்செவ்வாய் இரவில் திருத்தேர் உலா நடைபெறுகிறது. ஆடிமாதம் 2 -ஆவது செவ்வாய் முளையிடு விழாவும்; 3 -ஆவது செவ்வாய் கொடை விழாவும்; அடுத்த புதன்கிழமை அம்மனுக்கு மஞ்சன நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலைப் பொறுத்தவரை தசரா திருவிழாவே  முக்கியமானதாகும்.

வரமுனி  அகத்தியர் இட்ட சாபத்தால் எருமைத் தலையும் மனித உடலுடன் கொண்ட மகிஷாசுரன் வேள்வி செய்து வரம் பெற்றான்.  முனிவர்களுக்குப் பல இடையூறுகளைச்  செய்து வந்தான்.  முனிவர்கள் அம்பிகையை  வேண்டினர். அவள் வேள்வி நடக்கும் இடத்தினைச் சுற்றி மாய அரண் ஒன்றை உருவாக்கினாள்.  முனிவர்களும் வேள்வியைத் தொடர்ந்து நடத்தினர். இறுதியில் ஒரு பெண் குழந்தையாய் ஆதிபராசக்தியே  புரட்டாசி அமாவாசை திதியன்று அவதரித்தாள். அக்குழந்தைக்கு லலிதாம்பிகை எனப்பெயரிட்டனர். நவராத்தியின் 9 நாள்களிலும் வளர்ந்த  லலிதாம்பிகை 10 -ஆம் நாள் பராசக்தி வடிவம் தாங்கி மகிஷாசுரனை வதைக்கப் புறப்பட்டாள். அவ்வாறு மகிஷாசுரனை அழித்த 10 -ஆம் நாளே இத்திருக்கோயிலில் "தசரா நாள்"' என அழைக்கப்படுகிறது.  

தசரா திருவிழாவில் அன்னையிடம் அருள்வேண்டியும் அருள்பெற்றோரும் 41 நாள்கள் விரதம்  இருந்து வேஷம்கட்டி  நேர்த்திக் கடன்  செலுத்துவர். ஆண்கள் பெரும்பாலும் காளி வேடம் அணிவர். காளிவேடம் தவிர, கிருஷ்ணர், பலராமன், பரமசிவன், இந்திரன், சந்திரன், ராமன், ஆஞ்சநேயர்,  அரசன், அரசி, குறவன்-குறத்தி , சூரியன், எமதர்மன், காவல்துறை ஆய்வாளர்கள், மோகினிப்பெண், கரடி, கருங்குரங்கு போன்ற பல வேடங்களை பக்தர்கள் அணிவர். சிறு குழந்தைகளுக்கும் வேடமிட்டு தாயார் இடுப்பில் வைத்து அழைத்து வருவதும் உண்டு.

10.10.2018  -அன்று கொடியேற்றத்துடன் தசரா விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவுடன் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.  நிறைவாக,  19.10.2018 அன்று 10 -ஆம் நாள் சூலத்திற்கு மகா அபிஷேகம் நடந்து இரவு 12.00 மணிக்கு கடற்கரையில் இருக்கும் சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலை அம்பாள் அடைவாள்.  பிரார்த்தனையாக வேஷம் கட்டியவர்கள் அன்னையுடன் அணிவகுத்துச் செல்வார்கள்.  முதலில் மகிஷாசுரன் தலை, பின்னர் சிம்மத்தலை, அடுத்து எருமைத் தலை 4 ஆவதாகக் கோழித்தலை ஆகியவற்றைக் கொய்து வெற்றி வாகை சூடிய பின்பு வாணவேடிக்கை நடந்து  திருத்தேரில் திருக்கோயிலுக்கு மேளதாளம் முழங்கத் திரும்பி வருவாள்.

தொடர்புக்கு: 97101 97173/ 046392 50355.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com