செவ்வாய்க்கிழமை 11 டிசம்பர் 2018

பாவங்கள் போக்கும் மஹாதேவாஷ்டமி!

By - ரஞ்சனா பாலசுப்ரமணியன்| DIN | Published: 30th November 2018 12:43 PM

ராமாவதாரத்தில் மறைந்து நின்று வாலியைக் கொன்ற பாவத்திற்காக, கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணனை மானென்று நினைத்து கொன்றான் ஒரு வேடன். ஆணவமாக பேசிய பிரம்மாவின் தலையைக் கொய்த காரணத்தால் அந்த தலை தன் கையுடன் ஒட்டிக் கொள்ள அதனுடன் சிவபெருமான் அலைந்த கதையைப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

வேறு வழியில்லாமல் செய்யும் சில பாவங்களுக்கு பரிகாரங்களையும் நம் புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன. அவ்வாறு ஒரு பரிகாரம் செய்ய வேண்டி அன்னதானம் செய்தார் சிவபெருமான். அந்த வரலாற்றைக் காண்போம்:

ஒரு முறை பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், சிவபெருமானை வேண்டி தவம் செய்து பெரும் வரங்கள் பெற்றனர். அவற்றில் ஒன்று, சிவபெருமானை ஒத்த வலிமைவாய்ந்த, பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவரால் மட்டுமே தங்களுக்கு மரணம் நேரலாம் என்பதே. வரங்களைப் பெற்ற அந்த அசுரர்கள் மூவுலகையும் தங்கள் ஆளுகையில் கொண்டு வந்ததோடல்லாமல் தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி ஆனந்தமடைந்தனர். அவர்களின் அட்டகாசம் அதிகமாக, அதைப் பொறுக்காத எல்லோரும் சிவபெருமானை வேண்ட, அவரும் அரக்கர்களை அழிக்க முடிவுசெய்த போது, அவரது, நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் உருவாகின. அந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் சேர, அந்த ஆறு பொறிகளும் ஆறு அழகிய குழந்தைகளாக உருப்பெற, மிகுந்த ஆனந்தம் கொண்டு அந்த குழந்தைகளை அம்பிகை சேர்த்தணைக்க, எல்லா குழந்தைகளும் சேர்ந்து ஒரு குழந்தையாக, முருகனாக, உருப்பெற்றது.  

பால முருகன், தன் தளபதி வீரபாகுவுடனும் தேவர்களின் சேனையுடனும் அசுரர்களை அழிக்க போர்களம் புகுந்தார். போரில் மாயாஜாலங்கள் புரிந்த தாரகாசுரனை அழித்தார். சூரபத்மன் என்றழைக்கப்படும் பத்மாசுரனை அடக்கி, அவனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்துக் கொண்டார்.  ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள். அதைத்தான் நாம் கந்த சஷ்டியாகக் கொண்டாடுகிறோம்.

நியாயத்துக்காகவும் தர்மத்துக்காகவும் செய்த கொலையானாலும், முருகனையும் அந்தப் பாவம் விடவில்லை.  சிவபெருமான், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார். அவ்வாறு அவர் அன்னதானம் செய்த இடம்தான், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற திருத்தலம். அந்த நாள்தான் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி. இந்த வரலாற்றை அவ்வூரிலுள்ள மகாதேவர் கோயில் தலவரலாறு கூறுகிறது.  அதனால் இப்போதும், இந்த வரலாற்றிற்கேற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதமும் பெளர்ணமியைத் தொடர்ந்து வரும் அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாள்கள் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு  "வைக்கத்தஷ்டமி' என்று பெயர். 

இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர். இந்த அன்னதானத்தில் சிவனும் பார்வதியும் தம்பதி சமேதராக கலந்து கொண்டு ஆசி வழங்குவார்கள் என்ற ஐதீகம்  இருப்பதால், ஏராளமான பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொள்கின்றனர். இதை நெறிமுறைப்படுத்துவதற்காக அன்னதானத்திற்காக, முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும் என்று வழிமுறை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அன்னதான நிகழ்வை மலையாளத்தில் "பிராதல்' என்று அழைக்கின்றனர். அன்னதானத்தில், சாப்பிட வருவோரும், சிவனோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற, பரவச நிலையை அடைகின்றனர். அன்னதானம் முடிந்ததும் சாப்பிட்ட இலையில் பக்தர்கள் உருளுவர். இதனால் சிவபெருமானின் அருள் கிடைக்கப்பெற்று, உடலில் உள்ள ரோகங்கள் குணமாகும் என்பது ஐதீகம். அதனால் இப்படிப் புரள்வதாக வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். அதுமட்டுமல்லாமல்  பக்தர்கள் சாப்பிட பரிமாறவும்.  சாப்பிட்டபின் இலையை எடுத்து துப்புறவு செய்யவும் அன்பர்கள் போட்டிபோடுவர். 

அன்றைய தினம் உச்சிக்கால அபிஷேக ஆராதனைகள் முடிந்தபின் சுவாமி ஆனக்கொட்டில் எனப்படும் யானை வளர்க்கும் இடத்தில் எழுந்தருள்கிறார். அருகில் உள்ள திருக்கோயில்களில் இருந்தும் உற்சவ  மூர்த்திகள் எழுந்தருள்வர். அவ்வாறு அனைத்து தெய்வங்களும் வந்தபின் காணிக்கை செலுத்தும் வைபவம் நடைபெறுகிறது. இதற்காகவே பக்தர்கள் காத்திருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 

இரண்யாட்சன் என்ற அசுரனின் மகனான அந்தகாசுரன்,  விஷ்ணு,  பிரம்மா முதலான தெய்வங்களாலும் தனக்கு, அழிவு வரக் கூடாது என்ற வரத்தை, சிவபெருமானிடம் பெற்று, அந்த வரம் தந்த மமதையால் தேவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்த, துன்பத்தைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானையே சரணடைந்தனர்.  தான் கொடுத்த வரத்தினால் அட்டூழியங்கள் புரியும் அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்க முடிவெடுத்த சிவபெருமான், தன்னிலிருந்து பைரவரைத் தோற்றுவிக்க, அந்த பைரவரால் அடங்கினான் அந்தகாசுரன். அவ்வாறு அவன் அடங்கிய நாள் தான் அஷ்டமி தினம். அவன் சிவபெருமானின் பஞ்சாட்சரத்தை ஓதியவன் என்பதால், உயிர் பிழைத்தான்.  இதைப் பின்பற்றியே எதிரிகளால் தொல்லை இருந்தால், தேய்பிறை அஷ்டமி நாள்களில், பைரவருக்கு வடைமாலை, செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலையை, ராகு காலத்தில் சாத்தினால், எதிரிகளின் தொல்லை, நீங்கும் என்பர். 

மகாதேவாஷ்டமி வைக்கத்தில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் சிவாலயங்களிலும், பைரவத் தலங்களிலும் கொண்டாடப்படுகிறது. அஷ்டமியன்று அன்னதானத்திற்கு பொருள் வழங்கினால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்பது காலகாலமாக தொடரும் நம்பிக்கை. அஷ்டமியன்று சிவலிங்கத்தை வலம் வந்தால் கஷ்டங்கள் காற்றாய் பறக்கும். பாபங்கள் நிவர்த்தியாகும். இத்தகைய சிறப்புமிக்க மகாதேவாஷ்டமி இவ்வருடம், 30.11.2018 அன்று கொண்டாடப்படுகிறது. 

More from the section

கிறிஸ்து பாலகனை வரவேற்கலாம் வாங்க!
அந்தி முன்னிரவு தொழுகைகள்
நிகழ்வுகள்
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
ஸ்ரீயுடன் காட்சி தந்த சிங்கமுகன்!